தமிழ் இலக்கிய வரலாறு | History of Tamil Literature

தமிழ் இலக்கியம் ஏறத்தாழ இருபத்தைந்து நூற்றாண்டுகளின் வரலாற்றினை உடையது. தென்னிந்தியாவின் பிற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப்  பின்னர் தோன்றியவை. ஆகையால் அதற்கு முன்னர் பன்னிரண்டு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியம் தனியே வளர்ந்து வந்தது. சங்க காலத்துக்கும் கி.பி 7-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழகத்தில் இருந்திருக்கிறது.

சமண சமயமும், புத்த சமயமும் தமிழகத்தில் பரவத் தொடங்கிய பிறகு, அந்தச் சமயங்களைச் சார்ந்தவர்களில் பலரும் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றவர்களாக இருந்ததனால் வட நாட்டு மொழிகளின் சொற்கள் தமிழில் கலக்கத் தொடங்கின. இந்தியாவில் இலக்கிய  மொழிகளாக மதிக்கப்பட்டிருந்த மொழிகள் வடமொழியும் தமிழ் மொழியும் ஆகும். இவற்றை தென்மொழி, சமஸ்கிருதம் என்று குறிப்பிடுவர்.

சிவபெருமானின் தமருகத்தின் ஒரு பக்கத்திலிருந்து பிறந்த ஒலி தமிழ் ஆயிற்று என்றும், அந்தத் தமருகத்தின் மற்றொரு பக்கத்தில் பறிந்த ஒலி வடமொழி ஆயிற்று என்றும் புராணக்கதை வழங்கத் தொடங்கியது. சிவன் வடமொழியைப் பாணினிக்கும் தென் மொழியாகிய தமிழை அகத்தியர்க்கும் கற்றுக் கொடுத்து இரு மொழிகளையும் வளரச் செய்தார் என்றும் புராணக்கதைகள் வழங்கப்படுகின்றன.

தமிழ் இலக்கிய வரலாறு

இத்தகைய சிறப்பு வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாகிய தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்கள் பல்வகையின. அவற்றின் பரப்பு விரிந்தது. காலந்தோறும் தமிழகத்தில் பிற நாட்டு மொழி, சமய, சமூகத் தாக்குரவுகள் நிகழ்ந்துள்ளன. அவை தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் விளைவுகளைப் பதித்தன. தமிழ் இலக்கியம் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் எடுத்துரைக்கும் முறையிலும் மாற்றமடைந்து, செழுமை பெற்றது. அவ்வளர்ச்சியைக் கால நிரல் கொண்டு அறிவதாக அமைவதே இலக்கிய வரலாறு ஆகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றைப் பலவாறாகப் பாகுபாடு செய்வர். காலவகை அடிப்படையிலும், இலக்கிய வகைமை அடிப்படையிலும் பெரும்பாலும் தமிழிலக்கிய வரலாற்றைப் பகுத்துப் பலரும் இலக்கிய வரலாற்றை எழுதியுள்ளனர். பலரும் எழுதியிருப்பினும் மூதறிஞர் மு.வரதராசனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறே சிறப்பானதாக அமைந்திலங்குகின்றது.

வகைப்பாடு:

            தமிழிலக்கிய வரலாற்றை, பழங்காலம், இடைக்காலம், இக்காலம் என்று பகுக்கலாம். இவற்றுள் பழங்காலத்துள், சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், பழம்பெருங் காப்பியங்கள் ஆகியவை அடங்கும். இடைக்காலம் என்பதற்குள் பக்தி இலக்கியம், காப்பியங்கள், புராண இலக்கியங்கள், உரை வகைகள் உள்ளிட்டவை அடங்கும். இக்காலம் என்பதில் உரைநடை, நாவல், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை உள்ளிட்ட இலக்கிய வகைகள் அடங்கும்.

            இக்காலப் பாகுபாட்டை சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், தற்காலம் என்று ததமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சியை அடிப்படையாக வைத்துப் பகுத்துக் கூறுவர். இதனையே வீரயுகக் காலம், நீதி இலக்கிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பிய காலம், உரை இலக்கிய காலம், மறுமலர்ச்சி இலக்கிய காலம் என்று இலக்கிய வகைமை அடிப்படையில் பகுத்துக் கூறுவர்.

சங்க காலம்:

            கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை உள்ள காலகட்டத்தை சங்க காலம் என்பர். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடுவர். அகத்தியம், தொல்காப்பியம், பத்துப் பாட்டு எட்டுத் தொகை  ஆகிய நூல்கள் தோன்றிய காலத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவர். காதலும் வீரமும் இக்காலத்திய பாடுபொருள்களாக இருந்தன. மேலும் சேர, சோழ பாண்டியர்கள் தமிழகத்தை வீரத்துடன் ஆண்டனர். சங்கம் வைத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியை வளர்த்தனர். இச்சங்க இலக்கியங்கள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய பாவகைகளால் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

சங்கம் மருவிய காலம்:

            இக்காலம் கி.பி.100 முதல் கி.பி.500 வரையான காலகட்டமாகும். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய காலம் சங்கம் மருவிய காலம் ஆகும். இக்கால கட்டத்தில் நீதி இலக்கியங்கள் தோன்றின. இந்நீதி இலக்கியங்கள் பெரும்பான்மையும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களும், முத்தொள்ளாயிரம் என்ற நூலும் தோன்றின. இந்தச் சங்க இலக்கியங்களையும், சங்கம் மருவியகால இலக்கியங்களையும் சேர்த்து செம்மொழி இலக்கியங்கள் என்று வழங்கப்படுகின்றன.

பல்லவர் காலம்:

            கி.பி.600 முதல் 900 வரையிலான காலத்தை பல்லவர்கள் காலம் அல்லது பக்தி இலக்கிய காலம் என்று குறிப்பிடுவர். இக்காலத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி தமிழ் வளர்த்தனர். நாயன்மார்கள் எழுதியவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்பெற்றன. இவற்றை நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.

            பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் நாலாயிர திவ்விய பிரபந்தம் என்ற பெயரில் தொகுக்கப்பெற்றன. இவற்றைத் தொகுத்தளித்த பெருமை நாதமுனிகளைச் சாரும். பல்வேறு நிலைகளில் சிவனையும், திருமாலையும் பாடிப் பரவும் பக்தி இலக்கியங்களாக இவை திகழ்கின்றன.

சோழர் காலம்:

            கி.பி. 900 முதல் கி.பி.1200 வரையுள்ள காலம் சோழர் காலம் ஆகும். இக்காலத்தைக் காப்பிய காலம் என்று கூறுவர். பல்லவர்கள் பத்தாம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றதால் சோழர்கள் மறுபடியும் தலையெடுத்தாலர்கள். மேலும் பெரிய வல்லரசாகவும் உயர்ந்தோங்கினார்கள். இவர்கள் காலத்தில் ஐம்பெருங் காப்பியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் தோன்றிய காலம் இக்காலம் ஆகும். மேலும் பல்வேறு இலக்கண நூல்களும் இக்கால கட்டத்தில் தோன்றின.

            சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர், ஔவையார் உள்ளிட்ட பல புலவர்கள் வாழ்ந்து பல புகழ்பெற்ற நூல்களை எழுதினர். இக்கால கட்டத்தில் உலா, பரணி, பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல்வேறு சிற்றிலக்கியங்கள் தோன்றி புகழ்பரப்பின.

நாயக்கர் காலம்: 

            கி.பி.1200 முதல் கி.பி.1500 வரையுள்ள காலம் நாயக்கர் காலம் ஆகும். பதின்மூன்றாம் நூற்றாண்டில் சோழர்களும் வீழ்ச்சியுற்றார்கள். முகம்மதியர் தமிழகத்தின் மீது படையெடுத்தனர். நாடு கலக்கமுற்றது. விஜயநகர ஆட்சியின் சீழ் நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றார்கள். தெலுங்கு மொழி பேசுவோர் தமிழரோடு உறவு கொண்டார்கள். தமிழ்நாடடு ஆழ்வார் பாடல்கள் தெலுங்கில் இடம்பெற்றன. கன்னட நூல்கள் பிரபுலிங்க லீலை முதலியன தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. கன்னத்தில் நாயன்மார்களின் வரலாறுகள் எழுதப்பட்டன.

            இளம்பூரணர், பேராசிரியர், உள்ளிட்ட உரையாசிரியர்கள் தோன்றி இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினர். வைணவ உரைகளும், வைணவ விளக்க நூல்களும், சைவசித்தாந்த, சாத்திர நூல்களும், பிற சிறு நூல்களும் தனிப்பாடல்களும் தோன்றின.

ஐரோப்பியர் வருகை:

            கி.பி.1500 முதல் கி.பி. 1800 வரையில் உள்ள காலம் ஐரோப்பியர் வந்தேறிய காலம் எனலாம். இக்காலகட்டம் தமிழகத்தில் குழப்பமும் அமைதியின்மையும் நீடித்த காலம் என்று கூறலாம்.கருநாடக நவாப்பு தமிழகத்தின் வடபகுதியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினான். போராட்டங்களும் போர்களும் நடந்தன. நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ முடியவில்லை. இத்தகைய சூழலில் கம்பர் போன்ற பெரும்புலவர்களும் பெரிய இலக்கியங்களும் தோன்ற முடியவில்லை.

            படிப்படியாக நாயக்கர்கள் வீழ்ச்சியுற்ற பின்னர் தமிழகத்தில் ஆங்காங்கு கலகங்கள் எழுந்தன. தமிழகத்தின் ஒரு பகுதியை மராத்திய சரபோஜி மன்னர்கள் ஆண்டனர். மராத்திய சொற்கள் சில தமிழ்ப் பேச்சில் கலந்தன. முகமதியர்களின் ஆட்சி ஏற்பட்டது. புராண இலக்கியங்கள், தலபுராணங்கள் பல தோன்றின. எந்த அரசரையும் செல்வரையும் பொருட்படுத்தாத சித்தர் என்ற ஒருவகை ஞானிகள் தோன்றி பல பாடல்கள் பாடினர்.தத்துவராயர் உள்ளிட்ட பல ஞானிகளும் வாழ்ந்து உலகியல் கடந்த ஞானப்பாடல்களைப் பாடினார்கள். டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் தமிழகத்தில் வருகை புரிந்தனர். இஸ்லாமிய இலக்கியங்களும், கிறித்தவ இலக்கியங்களம் தோன்றின. வீரமாமுனிவர், முதலியவர்கள் தோன்றி தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.  உரைநடை தோன்றியது

பத்தொன்பதாம் நூற்றாண்டு:

            இக்காலத்தினை ஐரோப்பியர் காலம் என்று குறிப்பிடலாம். இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள் தோன்றினர். இக்காலத்தில் பல புத்திலக்கியங்கள் தோன்றி தமிழுக்கு வளம் சேர்த்தன. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தமிழின் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் இயற்றப்பட்டு வெளிவந்தது. வ.வே.சு ஐயர் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையை எழுதி தமிழ்ச்சிறுகதை இலக்கியத்தினை தொடங்கி வைத்தார். புதுக்கவிதை இலக்கியம் தோன்றியது. கட்டுரை இலக்கியம் வளர்ச்சியடைந்தது.

இருபதாம் நூற்றாண்டு:

            ஆங்கிலேயருக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நாட்டில் நடைபெற்றன. பாரதி உள்ளிட்ட பெருங்கவிஞர்கள் தோன்றி கவிதை இலக்கியத்தை வளம்பெறச் செய்தனர். கல்கி, உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் தோன்றி நாவல் இலக்கியத்தை வளப்படுத்தினர். புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலர் தோன்றி சிறுகதை இலக்கியத்திற்கு வளம் சேர்த்தனர். திரு.வி.க. உள்ளிட்ட தமிழறிஞர்கள் நல்ல கட்டுரை இலக்கியங்களைப் படைத்து தமிழன்னைக்கு அணி செய்தனர்.

            தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்டோரின் உழைப்பால் தமிழ் நாடகத்துறை வளமுற்றது. கடிதம், மொழி வரலாறு, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி உள்ளிட்ட இலக்கியத்துறைகள் தோன்றி தமிழை உலகளாவிய நிலைக்கு உயர்த்தியது.

இருபத்தோரம் நூற்றாண்டு:

            புதுக்கவிதை, வசனகவிதை என்று இருந்தது ஹைகூ, சென்ரியூ, லிமரைகூ என்று பல்வேறு வடிவங்களைக் கொண்டு வளர்ந்தது. சிறுகதைகள் ஒரு பக்கக் கதை, நிமிடக் கதை, மைக்ரோக் கதை என்று வளர்ந்து வருவது சிறப்பிற்குரிய ஒன்றாகும். இவ்விருபத்தோராம் நூற்றாண்டில் புதிய புதிய துறைகள் தமிழில் வளர்ந்து தமிழ் மொழியை வளமுடையதாக ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

            மொழிபெயர்ப்பியல் துறை, அகராதித்துறை, பதிப்புத்துறை, சுவடியியல் துறை, மானிடவியல் துறை என்று பல்வேறு நிலைகளில் இன்று தமிழில் புதியன தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் உலகச் செம்மொழிகளில் தமிழ் உயர்ந்து விளங்கி வருகின்றது என்பதை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன.