சோழர்களின் தலைநகரமாக விளங்கிய உறையூர் | Uraiyur Is The Capital Of The Early Cholas.

காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள உறையூர் கி.மு. 3 ஆம் நூற்றண்டில் இருந்தே சங்க காலத்துச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. தித்தன், கரிகால் சோழன், ,குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன், ஆகிய சோழர் கோமரபைச் சேர்ந்த மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் உறையூரினைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன..இந்நகரம் ஒரு செழிப்பான வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது.

உறையூர் - உறந்தை:

சங்க காலத்தில் உறையூர் உறந்தை என்று அழைக்கப்பட்டுள்ளது. உரபுரம், குக்குடம் , கோழி, கோழியூர், கோளியூர், திருக்கோழி, வாரணம், நிகலாபுரி, ஆகிய பெயர்களாலும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. ."கோழியோனே கோப்பெருஞ் சோழன்” என்று புறநானூற்றுப் பாடல் 212 குறிப்பிடுகிறது.

அமைவிடம்:

உறையூர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரத்தில் உள்ள ஒரு பகுதி ஆகும். உறையூர் திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து 4.3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

சங்க காலத்தில் உறையூர்:

"வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை" (குறுந்தொகை 116, இளங்கீரனார்) என்றும் ‘உறந்தை அன்ன பொன்னுடை நெடுநகர்’ என்றும் ‘உறந்தை அன்ன நிதியுடை நன்னகர்’ என்றும் சங்க இலக்கியங்கள் உறையூரின் செல்வவளத்தைச் குறிக்கின்றன. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய "தமிழகம் ஊரும் பேரும்"  என்ற நூலில் "ஊர் எனப்படுவது உறையூர்" என்றுகுறிப்பிட்டுள்ளார்..

உறையூர் என்றால் மக்கள் உறையும் ஊர் என்று பொருள்படும். செல்லா நல்லிசை உறந்தைக் குணாது  --என்ற பாடலின் வரிக்கு, "உறந்தை என்பதற்கு உறையூர்" என்று உரையாசிரியர் தன் குறிப்புரையில் குறிப்பிடுகிறார்.

உறையூர் சமஸ்கிருதத்தில் உரபுரா என்று அழைக்கப்பட்டுள்ளது. உரக என்ற அசை (syllable) நாகர்களை குறிக்கிறது. சோழர்களின் நாணயங்களில் "உரக " என்ற சொல் இடம்பெற்றுள்ளது குறப்பிடத்தக்கது.

சங்க இலக்கியப் பாடல்களில் உறந்தை:

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் உறந்தை என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.

மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு 

நற்றிணையும் உறந்தையின் சிறப்பைக் கூறுகிறது.

புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருளாகத் தவிரலர்,

(அகநானூறு 237, புலவர் தாயங்கண்ணனார்)

புதவம் என்னும் மதகு வழியாக நீர் பாய்ந்து வயலைச் செழிப்பாக்கும் ஊர். இந்த உறையூர் வாழ்க்கை அவருக்குக் கிடைத்தாலும், பொருளீட்டும் செயலுக்காக அங்கு அவர் தங்கமாட்டார்.

கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன

(அகநானூறு 385, புலவர் குடவாயிற் கீரத்தனார்)

போரிடுவதில் கைத்திறம் மிக்க யானையும், விரைந்து செல்லும் தேர்ப்படையும் கொண்ட சோழரின் காவிரி பாயும் விளைநிலத்தில் உள்ள உறந்தை என்னும் உறையூர்.

சங்ககாலச் சோழர்கள் -கரிகால் பெருவளத்தான்:

புகழ்பெற்ற சங்ககாலத்துச் சோழ மன்னனான கரிகாலச் சோழனின் தந்தை இளஞ்செட்சென்னி இறந்தபோது, சோழர்களின் வாரிசு யார் என்பதில் பெரும் சண்டை ஏற்பட்டது. பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருந்தமையால் சோழ அரச குடும்பங்கள் மிகப் பெரியவையாக இருந்தன. சோழ அரியணை ஏற பலரும் உரிமை கோரினர். போட்டியிலிருந்து கரிகாலனை நீக்குவதற்காக, தாயாதி ஒருவன் சிறுவனான கரிகாலனை ஒரு மாளிகையில் அடைத்து அம்மாளிகைக்குத் தீயிட்டான். தீப்பற்றிய மாளிகையிலிருந்து தப்பிக்கையில், இளவரசன் கரிகாலனின் கால் கருகிப் போன காரணத்தால் கரிகாலன் என்று பெயர்பெற்றான்.  பின் கரிகாலனே மிகச் சிறுவயதிலேயே சோழமன்னனாக அரியணை ஏறினான்.

கரிகாலனின் தலைநகராகவும் உறையூர் திகழ்ந்துள்ளது. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், பெருவளத்தான் ஆகிய பட்டப்பெயர்களும் உள்ளன. சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்களைப் பெற்ற சோழ மன்னன் கரிகாலச் சோழன் என்று எண்ணத் தக்கவாறு கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை, முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படை ஆகிய ஆற்றுப்படை நூல்களும் கரிகால் வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட பத்துப்பாட்டு ஆற்றுப்படை நூற்களாகும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்: 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ‘உறந்தையைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவன். .இவன் திண்தேர் வளவன்’ (புறநானூறு - 226,) என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையாரால் போற்றப்படுகிறான். தேர்மேல் இருந்து வலிமையாகத் தாக்க வல்லவன் என்பது இதன் பொருள்.

கிள்ளிவளவன் ஒரு சமயம் மலையமானின் இரு மகன்களை யானையின் காலால் மிதிக்க வைத்துக் கொல்ல முற்பட்டான். புலவர் கோவூர்க்கிழார் இக்குழந்தைகளைக் காப்பாற்ற கிள்ளிவளவனிடம் தூது சென்றார். ஒன்றுமறியாத சிறார்களைக் கொல்வது பாவம் என்று எடுத்துக்கூற சோழன் மனம் மாறினான். கிள்ளிவளவன் - மலையமான் இடையே மூள இருந்த பகையும் போரும் தடுத்து நிறுத்தப்பட்டது.

குளமுற்றம் என்ற ஊரில் இறந்தமையால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று பெயர் பெற்றான். மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் ஆகிய புலவர்கள் இரங்கற்பாக்களைப் பாடியுள்ளனர்.

பங்குனி முயக்கம்:

உறந்தை என்னும் உறையூரில், பங்குனி உத்தர நாளில் காவிரி ஆற்றங்கரை மணலை அடுத்திருந்த குளிர்ந்த சோலையில் பங்குனி முயக்கம் என்னும் பங்குனி திருவிழா நடைபெறும். சோழ அரசர்களும் இதில் கலந்துகொள்வர்.

"நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியாற்றின் கரையில் மணல் பரப்பில், சருகுகள் கொட்டிக்கிடக்கும் மரச்சோலையில் பொங்கலிட்டுப் படைக்கும் பங்குனித் திருவிழா நடைபெறும். விழாவுக்கு அடுத்த நாள் பொங்கல் வைத்த ஆடுப்புகள் வெறிச்சோடிக் கிடக்கும்." நற்றிணைப் பாடல் ஒன்று உறந்தையில் நடைபெற்ற இவ்விழாவை பங்குனி விழா என்று நற்றிணை குறிக்கிறது.

கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு

(நற்றிணை.234)

சங்ககாலப் புலவர்கள்:

• உறையூர் இளம்பொன் வாணிகனார், 
• உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், • உறையூர் கதுவாய்ச் சாத்தனார், 
• உறையூர் சல்லியங்குமரனார், 
• உறையூர் சிறுகந்தனார், 
• உறையூர் பல்காயனார், 
• உறையூர் மருத்துவன் தாமோதரனார், 
• உறையூர் முதுகண்ணன் சாத்தனார், • உறையூர் முதுகூத்தனார் 

 ஆகிய சங்க காலப் புலவர்கள் உறையூரை முன்னொட்டுப் பெயராகக் கொண்டிருந்தமையால் உறையூருடன் இவர்களுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு புலனாகிறது.
கிரேக்க மாலுமிகளின் பயணக்குறிப்பில் உறையூர்
உறையூர் எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் எரித்திரிய (செங்கடலைச்) கடலைச் சுற்றி கிரேக்க மொழி பேசும் எகிப்திய வணிக மாலுமிகளால் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் பாய்மரக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணத்தை விவரிக்கிறது. 

உறையூர் தொல்லியல் அகழ்வாய்வுகள்: 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியில் துறை ஆகியோர் இணைந்து, 1965 முதல் 1969 வரையான காலத்தில் நான்கு பருவங்களுக்கு மேல், உறையூரில் தொல்லியல் அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். பலவேறு ஆய்வுக்குழிகள் பல்வேறு இடங்களில் அகழப்பட்டு பெரும் அளவில் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. ஒரு ஆய்வுக் குழியில், 4 X 4 அடி அளவு உடைய சாயத் தொட்டி ஒன்றின் எச்சம் தரைக்குக் கீழே எட்டடி ஆழத்தில் கண்டறியப்பட்டது. இது துணிகளுக்குச் சாயமிடுவதற்கான நீர்த் தொட்டி ஆகும். 

இச்சாயத்தொட்டியே இங்கு நெசவுத்தொழில் சிறந்திருந்தது என்பதற்கான சான்றாகும்.
எழுத்துப் பொறிப்புள்ள சிவப்புநிற பிராமிப் பொறிப்புப்பெற்ற பானை ஓடு ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது. இப்பானை ஓடு கி.மு. 3 ஆம் நூற்றாண்டினது என்று கால அளவீடு செய்யப்பட்டுள்ளது. ரோமானியர் தொடர்புகளைச் சுட்டுகின்ற ரௌலட்டட் வகை பானை ஓடுகளும், மெருகேற்றிய சிவப்புப் பானை (Polished Redware) ஓடுகளும், கீறல்குறிகள் (graffitti) பெற்ற நாட்டுப் பானைஓடுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. 

இக் கீறல்குறியீடுகள் சிந்துவெளி நாகரிக காலத்து வரிவடிவுடன் ஒப்பிடத்தக்கன. இத்தொல்லியல் களத்தின் மண்ணடுக்கியல் (stratigraphy) அடிப்படையிலும், கூட்டாகக் கண்டறியப்பட்ட கருப்பு - சிவப்புநிற மட்பாண்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் கி.மு.1000 - கி.மு. 300 க்கு இடையேயான காலம் என்று கால அளவீடு செய்யப்பட்டுள்ளது..

உறையூர் ஒரு வணிக மையம்: 

உறையூர் நகரை நோக்கி கிரேக்கர்களும் ரோமானியர்களும் அடிக்கடி வந்து வணிகம் மேற்கொண்ட செய்தியினைத் தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. மேற்குக் கடற்கரையிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாகத் தொடங்கும் ‘இராஜகேசரி பெருவழி’ (இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″) என்ற வணிகப் பெருவழி உறையூர் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது. உறையூரிலிருந்து காவிரி ஆற்றின் வாயிலாக பூம்புகார் துறைமுகம் வரை சிறு படகுப் போக்குவரத்து இருந்துள்ளது. 

உள்நாட்டின் சரக்குகள் இப்படகுகள் மூலமாகவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சோழநாட்டின் ஜவுளித் துணிக்கு, சர்வதேச அளவில் பெரும் கிராக்கி இருந்துள்ளது; குறிப்பாக, கிரேக்கர்களால் ஆர்கரிடிக் (Argaritic) என அழைக்கப்பட்ட, உறையூரின் மஸ்லின் துணி உலகின் மிகச்சிறந்த துணியாகக் கருதப்பட்டது, கிரேக்க உயர் குடியினர் இவ்வகை மஸ்லின் துணியினை விரும்பி அணிந்தனர். சோழநாட்டிற்கு மிகுந்த அயல்நாட்டு வருவாய் ஈட்டித் தரும் பண்டமாக மஸ்லின் துணி திகழ்ந்தது.

உறையூர் மணிகிராமம் வணிகர் குழு: 

தமிழகத்தில் சங்ககாலத்திலேயே வணிகச் சாத்து என்னும் பெயரில் செயல்பட்ட வணிகக் குழுக்கள் (கூட்டம்) பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சோழர்கள் காலத்தில் வாணிகம் செழித்து வளர்ந்தது. தமிழகத்தில் கி.பி. 11 – 13 ஆம் நூற்றாண்டுகளில் நானாதேசி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர், சித்திரமேழிப் பெரியநாடு, அத்திகோசத்தார், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார் ஆகிய வணிகக் குழுக்கள் (Trade Guilds) இயங்கி வந்துள்ளன. 

“மணிக்கிராமம்” என்ற வணிகருக்குரிய பட்டம் பெற்ற வணிகர்களே மணிக்கிராமத்தார் ஆவர். எட்டுத் திசைகளும் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்த ‘மணிக்கிராமம் செட்டிகள்’ பற்றி நிறையச் செய்திகள் உள்ளன. உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன