யூனியன் பிரதேசம் என்றால் என்ன?

அரசியல் அல்லது நிர்வாக காரணங்களுக்காக, எந்த ஒரு பகுதி, மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் இயங்குகிறதோ அந்த பகுதி யூனியன் பிரதேசமாக கருதப்படுகிறது. லெப்டினென்ட் கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பர். மத்திய அரசு பரிந்துரைக்கும் ஒருவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயல்படுவார். தற்போது டெல்லி, புதுச்சேரி தவிர வேறு எந்த யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இல்லை.

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள்:

• சண்டிகர் 

• தாத்ரா, நகர் ஹவேலி 

• தமன், தியூ

• லட்சத்தீவுகள்

• புதுச்சேரி

• அந்தமான், நிகோபர் தீவுகள் 

• தில்லி

• ஜம்மு & காஷ்மிர்

• லடாக்

அதற்கானத் தேவை என்ன: 

இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளனைத்தும் ஏதோ ஒரு மாநிலத்தின் கீழ் அமைந்துள்ளன; இவை மட்டும் தனித்து யூனியன் பிரதேசங்களாக அறியப்படுவது ஏன்? இவற்றினிடையில் என்ன ஒற்றுமை என்று யோசித்தால், முதலில் நிலப்பரப்பு: சண்டிகரின் பரப்பு 114சதுரகிலோமீட்டர், நம் சென்னையின் பரப்பில் பத்தில் ஒருபங்குதான். லட்சத்தீவுகள் அதைவிடச் சிறியது, 32சதுரகிலோமீட்டர்தான்; அந்தமான், நிகோபரைத்தவிர மற்ற யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறு பகுதிகள்தான்.
அந்தமான், நிகோபர் அளவில் பெரியதாக இருப்பினும், மற்ற அனைத்து மாநிலங்களிலிருந்தும் கணிசமான அளவு தள்ளியிருக்கிறது. ஆகவே, அதனை இன்னொரு மாநிலத்துடன் இணைத்து நிர்வகிக்கச்செய்வது சிரமம்; அதைத் தனி மாநிலமாக அறிவிக்கலாம் என்றால், மற்ற மாநிலங்களைவிட அது மிகச்சிறியதாக இருக்கும்.

union territory of india

யூனியன் பிரதேசங்களின் மக்கள்தொகையும் குறைவுதான் தில்லி தவிர மற்ற பகுதிகளில் வாழ்வோரின் எண்ணிக்கை சில லட்சங்கள்தான்.

இந்தியச் சுதந்தரத்துக்குமுன், புதுச்சேரி ஃபிரெஞ்சுக் காலனியாக இருந்தது. தாத்ரா, நகர் ஹவேலி, தமன், தியூ போன்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியாவின்கீழ் இருந்தன; இதனால், மீதமுள்ள இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதிகளின் கலாசாரம் கணிசமாக மாறுபட்டிருக்கிறது; இதுவும் ஒரு முக்கியமான மாறுபாடு.
இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தபோது, புதுச்சேரியும் அதைச்சுற்றியிருந்த சில பகுதிகளும் பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. அவற்றைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள இந்தியா முயன்றது. ஃபிரான்ஸுக்கு இதில் சம்மதம்தான்; ஆனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டுமல்லவா?
அன்றைய புதுச்சேரியை ஆண்டுவந்த மக்கள் பிரதிநிதிகளில் பிரெஞ்சுக் காலனியாகவே தொடர விரும்பியவர்களும் இருந்தார்கள்; இந்தியாவுடன் இணைய விரும்பியவர்களும் இருந்தார்கள்; தங்களுக்கு எது நல்லது என்று பலவிதமாக ஆராய்ந்தபிறகு, பெரும்பான்மைத் தலைவர்களின் ஒப்புதலுடன் 1954ல் புதுச்சேரி இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது; பின்னர் 1962ல் இது யூனியன் பிரதேசமானது.

இதனிடையில், 1956ல் அந்தமான் நிகோபர் தீவுகளும், பல தீவுகளின் தொகுப்பான லட்சத்தீவுகளும் யூனியன் பிரதேசங்களாகின; ஐந்தாண்டுகளுக்குப்பின் (1961ல்) தாத்ரா, நகர் ஹவேலி தனி யூனியன் பிரதேசமாகவும், கோவா, தமன், தியூ ஒரு யூனியன் பிரதேசமாகவும் ஆகின.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களும் உருவாகின. அதாவது, ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுவோர் அதிகமுள்ள பகுதிகள் தனி மாநிலங்களாகப் பகுக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, கன்னடர்கள் அதிகமுள்ள பகுதி கர்நாடகம் என்றும், மராத்தி பேசுவோர் அதிகமுள்ள பகுதி மஹாராஷ்டிரா என்றும், குஜராத்திகள் அதிகமுள்ள பகுதி குஜராத் என்றும் மாறின.

இந்த மாற்றங்களின் அதிர்வுகள், கோவாவில் ஒரு புதிய பிரச்னையைத் தொடங்கிவைத்தன: கோவா யாருடன் சேரவேண்டும்?
கோவாவில் அதிகப்பேர் பேசும் மொழி கொங்கணி. அதனை மராத்தியின் ஒரு வடிவம் என்று கருதுபவர்கள் இருந்தார்கள்; ஆகவே, கோவா மஹாராஷ்டிராவுடன் இணையவேண்டுமென்று இவர்கள் விரும்பினார்கள். இன்னொருபக்கம், கோவா யூனியன் பிரதேசமாகத் தொடரவேண்டும் என்று விரும்புகிறவர்களும் இருந்தார்கள்.
உண்மையில் கோவா மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக 1967ல் ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. 

லட்சக்கணக்கானோர் வாக்களித்த இந்தத் தேர்தலில், 54% மக்கள் கோவா யூனியன் பிரதேசமாகத் தொடரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆகவே, அது மஹாராஷ்டிராவுடன் இணைக்கப்படவில்லை.
அதன்பிறகு, கோவாவைத் தனி மாநிலமாக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு பிறகு, 1987ல் கோவா தனி மாநிலமானது. தமன், தியூ யூனியன் பிரதேசமாகத் தொடர்ந்தது.

இப்படிப் பல சூழ்நிலைகளில் பல காரணங்களுக்காக யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவற்றிடையிலுள்ள பொதுவான விஷயம். இவை யூனியன் அரசால், அதாவது, மத்திய அரசால் ஆளப்படுகின்றன, இவற்றுக்கான வளர்ச்சி நிதியையும் மத்திய அரசு வழங்குகிறது. யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பதற்குக் குடியரசுத்தலைவர் நிர்வாகிகளை நியமிப்பார் என்கிறது இந்திய அரசியல் சட்டம்.

இதன்படி, தில்லி, புதுச்சேரி, அந்தமான், நிகோபர் பகுதிகளுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகளாகத் துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகிகள்மட்டும் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநிலங்களைப்போல, யூனியன் பிரதேசங்களிலிருந்தும் பிரதிநிதிகள் இந்திய மக்களவைக்குச் செல்கிறார்கள். தில்லிக்குமட்டும் ஏழு மக்களவை உறுப்பினர்கள், மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் தலா ஒரு மக்களவை உறுப்பினர். 

தில்லிக்கு மூன்று, புதுச்சேரிக்கு ஒன்று என நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இத்துடன், புதுச்சேரி, தில்லி ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்குமட்டும் ஒரு கூடுதல் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது: இங்கு வாழும் மக்கள் தங்களுக்கான அரசாங்கத்தை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கலாம்; சட்டமன்றம் உண்டு, அமைச்சரவை உண்டு, முதலமைச்சர் உண்டு