தமிழ்மொழியை வளர்க்க பாடுபட்ட மேல்நாட்டவர்கள் அறிஞர்கள்

தமிழ்மொழியை வளர்க்க பாடுபட்ட மேல்நாட்டவர்கள் அறிஞர்கள்

''சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்'' என்பது ஈழத்துப் புலவர் க.சச்சிதானந்தன் அவர்களின் கூற்று. அத்தகு அறிஞர்கள், பெருந்தகையினர் பெருமைகொண்டு வாழ்த்திய மொழியினை தான் நாம் தினந்தோறும் உரையாடி வாழ்ந்துவருகிறோம். 

ஆரம்பகாலங்களில் தமிழ் மொழியின் அருமை உணர்ந்து அதனை வளர்த்தெடுக்கப் பாடுபட்டோர் ஏராளம். அவர்கள் பாடல்கள், கவிதைகள் போன்ற கலை இலக்கிய அம்சங்களை ஓலைச்சுவடுகள் கல்வெட்டுகளில் ஆரம்பித்து பல்வேறு வழிகளில் தமிழை உலகனைத்தும் கொண்டு சேர்த்து பெருமை படுத்தினர். 

தமிழர்கள் மட்டுமின்றி தமிழ்மொழியின் பெருமை உணர்ந்த சில வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். கலை, இலக்கியம், பண்பாடு, வீரம், அறம், நெறிகள் நிறைந்த உலகின் மூத்த மொழியாகிய  தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்து தமிழ் மொழிக்கென பாடுபட்ட சில மேல்நாட்டு அறிஞர்கள் பற்றி இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

ரோபட் டீ நோபிலி - Robert de Nobili   ( 1577 - 1656 )

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரோபட் டீ நோபிலி 17ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தந்தவர் என்கிறது வரலாற்றுக் குறிப்புகள். இவர் இத்தாலி நாட்டிலுள்ள போதகர்களுள் ஒருவராவார். இவரை அக தத்துவ போதகர் அன்றும் அழைப்பதுண்டு. தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு தமிழ் கற்றுக்கொண்ட இவர், நானோ பதிகம், ஆத்ம நிருண்யம், அன்ன நிவாரணம் மற்றும் திவ்ய மந்திரிகா என்னும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

அது மட்டுமின்றி போர்த்துக்கீசிய மொழியில் தமிழ் அகராதியொன்றினைத் தொகுத்து தமிழின் பெருமையை உலகறியச்செய்தார். சமயங்கள், வேதங்கள்,புராணங்கள் என ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்த இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் வடமொழி,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். 1656 ஆம் ஆண்டில் இவரது இறுதி நாட்களை சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்துள்ளார். 

கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர் ( 1680 - 1747 )


இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி எனும் இயற்பெயர் கொண்ட இவருக்கு, மதுரை தமிழ் சங்கத்தார் சேர்ந்து "வீரமாமுனிவர்" எனப் பெயர் சூட்டினார்கள். தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழி மீது அவர் கொண்டிருந்த ஈர்ப்பும் பற்றும் தான் அதற்கு காரணமாய் அமைந்தது.  தமிழ் மொழியின் மீது இவர் கொண்டிருந்த காதலே பின்னாட்களில் தமிழில் பல நூல்களை எழுத வழிவகுத்தது. பரமார்த்த குருவின் கதை,கொடுந்தமிழ் இலக்கணம், இலத்தீன் மொழியில் தமிழ் அகராதி, வாமன் சரித்திரம்,வேதியர் ஒழுக்கம் போன்ற நூல்கள் இவரால் இயற்றப்பட்டுள்ளது. இலத்தீனில் மொழியில் செந்தமிழ் இலக்கணம் எழுதியவரும் இவராவார்.   

ரொபட் கார்ட்வெல் - Robert Caldwell  ( 1814 - 1891 )

அயர்லாந்தை பிறப்பிடமாகக்கொண்ட ரொபட் கார்ட்வெல் திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து பெரும் ஆய்வு நடத்தியவர்களில் முதன்மையானவராவார். கிறிஸ்த்துவ மதப்பணியை மேற்கொள்வதற்கு 1838 ஆண்டு இந்தியா வந்தவர் என்கிறது வரலாற்றுக்குறிப்புகள். திராவிட மொழிகளை பற்றிய ஆராய்வை மேற்கொண்டு, A Comparative Grammar of the Dravidian எனும் நூலை எழுதி வெளியிட்டார். ஆரியம் வேறு திராவிடம் வேறு என்றும் கோட்பாட்டை முதலில் சொன்ன பெருமை ரொபட் கார்ட்வெலுக்கு சேரும்.


தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தான் தோன்றியது என சிலர் சொல்லிக்கொண்டிருந்த அந்நேரத்தில், வடமொழிகளில் இருந்து தமிழ் தோன்றவில்லை அது தனித்ததொரு மூத்தமொழி என ஆராய்ந்துச் சொன்னார். நற்கருணை தியான மாலை, ஞானஸ்தானம், தாமரைத் தடாகம் மற்றும் திருநெல்வேலி வரலாறு போன்ற உரைநடை நூல்களை தமிழுக்குத் தந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆசியச் சமூகம் (Royal asiatic society) இணைந்து இவருக்கு "இலக்கிய வேந்தர்" எனும் பட்டத்தை வழங்கி கெளரவப்படுத்தியது.

ஜி. யு. போப் - George Uglow Pope          ( 1820 - 1908 )

வெளிநாட்டு தமிழ் அறிஞர்களுள் ஜி. யு. போப் அவர்கள் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்ககூடிய  அறிஞர். இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் தமிழ்நாடு தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்த கால கட்டத்தில் புறநானூறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்று சில பல ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


அத்தோடு தமிழின் பிரபல நூல்களான திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழால் பல உலக மேடைகள் ஏறி பெருமை பெற்றார். 'இங்கிலாந்து தேச சரித்திரம்' எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்து தமிழுக்கு பெருமை சேர்த்துடன், Elementary tamil grammar என்ற தலைப்பில் தமிழ் இலக்கணங்களை உலகளவில் பிரபலப்படுத்தினார். இப்படி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்ட போப்பின் தமிழ் பற்றுக்காக சென்னை மெரினா கடற்கரையில் உருவச்சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது. 

சீகன்பால்க்- Ziegenbalg (1682 - 1719) 

ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த சீகன்பால்க் அவர்கள் கிறிஸ்தவ மத போதகராக இந்தியா வந்தவர். இக்காலங்களில் தமிழ் மீது ஆர்வமும் பற்றும் உண்டாகிப்போக தமிழ்நாடு நாகப்பட்டினத்திலுள்ள தரங்கம்பாடி எனும் ஊரில் தமிழ் கற்க ஆரம்பித்திருகிறார் என்கிறது வரலாற்றுச் சான்றுகள். தமிழ் மற்றும் சமயம் என இவரின் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்க அச்சமயத்தில் அச்சுக் கூடமொன்றை (printing press) நிறுவி தமிழ் இலக்கிய நூல்களை அச்சிட்டு வந்துள்ளார்.


தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்துள்ளார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகியதாகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தமிழைத் தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டதாகவும் குறிப்புகள் சொல்கின்றன. தமிழுக்கு இவராற்றிய தொண்டுக்காக இவரின் இறப்பின் பின்பு நாகப்பட்டினம் தரங்கம்பாடி பகுதியில் உருவச்சிலை அமைத்து கெளரவப்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடியது.