இராஜராஜ சோழனின் போர் குறிப்புகள் | War Notes On Rajaraja Chola.

சோழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் உலகப்புகழ் பெற்றவர் சோழப்பேரரசர், மும்முடி சோழர் கோப்பரகேசரிவர்மர் முதலாம் இராஜராஜ சோழன்.

கி.பி 985 முதல் கி.பி 1014 ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகள் இவர் சோழப்பேரரசராக ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலம் சோழகளின் பொற்காலம் என்று புகழப்படுகிறது. இராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழிவர்மன். விஜயாலய சோழன் நிறுவிய சோழப்பேரரசு இவர் காலத்திலும் மற்றும் இவர் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்த நிலையை எட்டியது . இராஜராஜ சோழனனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.


சோழர்களின் மெய்க்கீர்த்திகள்:

பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அந்த செயல்களைச் செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் அவர்களின் முன்னோர் பற்றிய வரலாறுகளை முதலில் எழுதினர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவர் இராஜராஜ சோழன். இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இப் பழக்கத்தைப் பின்பற்றினர். 

இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவில் இருந்த மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன.

சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். இராஜராஜ சோழன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் ‘திருமகள் போல’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியே பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்த’ என்ற மெய்க்கீர்த்தியும் நிறைய கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேரளப் போர்: 

இராஜராஜ சோழன் பல சிறப்பான போர்களைப் புரிந்தார். இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, 989ல் நடந்த இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது கல்வெட்டுகள் விளக்குகின்றது. கேரளாவில் உள்ள காந்தளூர்ச் சாலை எனும் இடம் சேர வீரர்கள் போர் பயிற்சி பெரும் இடமாக விளங்கியது. இராஜராஜ சோழன் இந்த இடத்தை முற்றிலுமாக அழித்தார். இந்த இடம் தற்போது கேரளாவில் வலியசாலா என்று அழைகப்படுகின்றது. மேலும் சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இராஜராஜ சோழன் தற்போது கேரளாவில் உள்ள விழிஞம் என்ற இடத்தில இருந்த வெற்றிபெற முடியாத கடற்கோட்டையைப் வெற்றிபெற்றார் என்றும் தெரிகிறது. 

மேலும் அங்கிருந்த கப்பல்கள் அனைத்தையும் அழித்தார் என்றும் தெரிகின்றது. இந்த போரின் வெற்றிகுப்பிறகு இராஜராஜ சோழனின் மெய்கீர்த்திகள் அனைத்தும் ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்த’ என்ற வரிகளுடனே ஆரம்பித்தன. 2009ல் திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டில் இராஜராஜ சோழன் சேர நாட்டு வீரர்களின் தலையைக் கொய்தது பற்றி குறிப்புக்கள் உள்ளது. மற்றும் சேர மன்னனின் கப்பலை இராஜராஜ சோழன் இரண்டாக பிளந்தது பற்றியும் குறிப்பு உள்ளது.

சிங்களப் போர்:

993ல் இராஜராஜ சோழன் அனுராதபுரம் என்கிற சிங்களத்தின் மீது படையெடுத்து சென்றார். அப்போது அனுராதபுரத்தின் மன்னராக விளங்கியவர் ஐந்தாம் மஹிந்தா என்பவர். ஐந்தாம் மஹிந்தா கொடுமை மிக்க ஒரு திறமையற்ற மன்னர். அவர் காலகட்டத்தில் அனுராதபுரம் பெரும் நிதிப் பற்றாக்குறையால் தடுமாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இராஜராஜ சோழன் போன்ற பெரும் மன்னருடன் போரிட முடியாத ஐந்தாம் மஹிந்தா ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜ சோழன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டார் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் இராஜராஜன் சோழரால் முற்றிலும் அழிக்கப்பட்டது. பொலன்னறுவா சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மஹிந்தா சோழர் சிறைச்சாலையில் 1029ம் ஆண்டு இறந்தார். ஐந்தாம் மஹிந்தாவுடன் அனுராதபுரம் அரசு முடிவுக்கு வந்தது. இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவர எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டார். ஆனால் இவரின் மகனான இராஜேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி சோழ அரசின் கீழ் வந்தது.

இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவாவில் இராஜராஜ சோழன் சிவன் கோவில் ஒன்று கட்டினார் . பொலன்னறுவா நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் கிபி 12ம் நூற்றாண்டுகளுக்குள் கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே (தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.

998 -ல் கங்கர்களின் கங்கபாடியும், நுளம்பர்களின் நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. நுளம்பர்களின் பரம்பரை முடிவுக்கு வந்தது.

இராஜராஜ சோழன் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியையும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.

திருவாலங்காட்டுப் பட்டயங்கள்:

திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இராஜராஜ சோழன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று இக்குறிப்பு கூறுகிறது. இராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் கேரள, பாண்டிய மற்றும் சிங்கள அரசர்கள் ஒன்றாக இணைத்து ஒரே கூட்டாக செயல்பட்டனர். இராஜராஜ சோழனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவர் படையும் சேர்த்தே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 – 1036). பாஸ்கர ரவிவர்மனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

சாளுக்கியப் போர்:

999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜ சோழன் சாளுக்கிய நாட்டின் மீது படை எடுத்து சென்றார் . சாளுக்கிய மன்னனான சத்தியாசிரயன் இராஜராஜ சோழனின் கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் தெரியவருகிறது. 

சத்தியாசிரயன் செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜ சோழன் அளித்தான் என்று இராஜராஜ சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது.

1011ம் மே திங்கள் 10-ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்று தெளிவாகிறது.

வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜ சோழனின் அதிகாரத்திற்கு உட்பட்டதையும் மேலைச் சாளுக்கியர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

பாண்டிய நாட்டுப் போர்:

கிபி 1005 -ல் இராஜராஜ சோழன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து அதை வென்றார். பாண்டியனின் தலைநகர் மதுரை முற்றிலும் சூறையாடப்பட்டது. மேலும் இராஜராஜ சோழன் பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்து பற்றியும் திருவாலங்காட்டுப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடகுப் போர்:

கிபி 1008ல் சோழப் பேரரசின் தூதுவர் குடகுநாட்டில் அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து இராஜராஜ சோழன் குடகு நாட்டின் மீது போர் தொடுத்தார். குடகுநாடு, குடகுமலை நாடு என்றும் அழைக்கப்பட்டது. தற்போது கர்நாடகாவில் உள்ள கூர்க் எனும் பகுதிதான் இராஜராஜ சோழன் காலத்தில் குடகு மலை என்று அழைக்கப்பட்டது. ராஜராஜசோழன் போரில் வென்று உதகை கோட்டையை நிர்முலமாகினர். மேலும் 18 இளவரசர்களின் தலையை இராஜராஜ சோழன் துண்டித்தார்.

கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். இராஜராஜ சோழன் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்கு உள்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலும் சோழநாடு மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.

மாலத் தீவுப் போர்:

இராஜராஜ சோழன் போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவர் ‘முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்’ எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜ சோழன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது.

தஞ்சாவூரில் உள்ள பெரியகோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் பிரஹதீஸ்வர் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது.

நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராஜராஜ சோழன் நன்கு அமைத்தார். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினார். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, மேலும் பல வெற்றிகளை அடைந்து பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் இராஜராஜ சோழன் திகழ்ந்தார்.


ஆழ்ந்த சிவபக்தனான இராஜராஜ சோழன் எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தார் . தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னைன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷ்ணு ஆலங்களிலிருந்தும் இராஜராஜ சோழன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மானப்பான்மை உடையவனாகவே இருந்தார் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தார் என்று புகழ் வாய்ந்த லெய்டன் பட்டயங்கள் கூறுகின்றன.

இராஜராஜன் அவர்களின் பட்டத்து அரசியாக உலகமகாதேவியார் என்பவர் இருந்துள்ளார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜ சோழன் திருவாயிலிலுள்ள ஒரு கல்வெட்டில் இராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான உலகமகாதேவியார் கோயிலுக்கு கொடைகள் அளித்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப்படை:

முதலாம் இராஜராஜ சோழன் நினைவிடம் (பள்ளிப்படை) தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் அருகே உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.