கரிகால சோழன் வாழ்க்கை குறிப்பு | Karikala Chola Life History & Karikala cholan biography.

முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென் இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னி மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.

கரிகால சோழன் பற்றி சங்க இலக்கியங்கலில் நிறைய இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதாக வரக்கூடிய பொருநர் ஆற்றுப்படை சோழ மன்னர் கரிகால் வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பொருநர் ஆற்றுப்படையை இயற்றினார். பொருநர் ஆற்றுப்படை தவிர பட்டினப்பாலை, அகநானுறு மற்றும் புறநானுறு ஆகிய நூல்களிலும் கரிகால சோழன் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சங்ககால இலக்கியங்களில் மற்றும் கல்வட்டுக்கள் வாயிலாக மன்னர் கரிகால சோழன் பற்றிய பல்வேறு தகவல்களை நாம் பெறமுடிந்தாலும், அவருடைய ஆட்சி காலம் குறித்த சரியான தகவல்கள் ஏதுவும் இதுவரையில் ஆதாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. கி.மூ 270ல் இருந்து கிபி 180க்கு இடைபட்ட காலத்தில இவர் ஆட்சி செய்து இருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

கரிகாலன் என்ற பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். இந்த காரண பெயர் குறித்து இரு வேறு கருத்துகள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகிறது. கரிகால சோழனுடைய சிறுவயதிலேயே அவருடைய தந்தை இளம்சேட்சென்னி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கரிகால சோழன் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறினார். சரியான மன்னர் இல்லாது இருந்த சோழ நாடு பெரும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது. 

சோழர் பரம்பரைக்கு விசுவாசமாமாக இருந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கருவூரில் இருந்த சோழ இளவல் கரிகால சோழனை நாட்டை ஆளக் கூட்டிவந்தனர். ஆனால் கரிகால சோழனுடைய அரசியல் எதிரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரிகால சோழன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் மத்தியில நாளுக்கு நாள் அவருடைய செல்வாக்கு ஏறிக்கொண்டே இருந்தது. இதனால் கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். 

அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அதுவே மருவி கரிகால சோழனாக நிலைத்தது. சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கரிகால சோழன் அவருடைய மாமன் இருபிடர்தலையன் உதவியுடன் பெரும் படையை திரட்டி எதிரிகளை தோற்கடித்து சோழ அரியசனத்தில் மன்னராக அமர்ந்தார்.

சில ஆராச்சியாளர்கள் கரிகாலன் என்ற பெயருக்கு வேறு காரணம் கருதுகிறார்கள். கரி என்றால் யானை காலன் என்றால் எமன், அதாவது யானைகளை கொன்றவன் என்கின்ற அர்த்தத்தில் வந்த பெயர்தான் கரிகாலன் என்று கருதுகிறார்கள். ஆனால் இந்தக் காரணம் பெருவாரியான சரித்திர ஆராய்ச்சியாளர்களால் ஏற்கப்படவில்லை.

கரிகால சோழன் சோழ அறியாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.

சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வென்றிடலாம் என்று எண்ணி போர் தொடுத்து வந்த அத்துனை பேரையும் அவர்கள் பெரும் படையையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை சுடினார். இப்போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார். இதை புறநானுற்றுப் பாடல் ஒன்று விவரிக்கிறது.

“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்…..”
(புறம்- 65)

வெண்ணி ஊரில் பிறந்த குயவர் தொழில் மரபில் வந்த பெண் புலவர் ஒருவர் கரிகால சோழனை புகழ்ந்து பாடிய புறநானுற்றுப் பாடல்,

“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலக மெய்திப்
புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே”
(புறம்-66)

அகநானூறில் உள்ள மாமூலனார் எழுதிய பாடல்,

“கரிகால் வளவ னொடு வெண்ணிப் பரந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும் பெறலுலகத் தவனோடு செலீஇயர்
பெரும் பிறிதாகி யாங்கு”
(அகம்-55)

மேலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போரைப் பற்றி நாம் சங்ககால இலக்கியமான பொருநராற்றுப்படை வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. தற்போது தஞ்சாவூரில் இருந்து சுமார் 26 கிமி தொலைவில் உள்ள வெண்ணி என்ற ஊரில் இந்தப் போர் நடைபெற்றது இந்த ஊரின் தற்போதைய பெயர் கோவில்வெண்ணி.

வெண்ணிப் பறந்தலையில் நடந்தது போலவே வெண்ணிவாயில் என்னும் மற்றொரு ஊரிலும் போர் நடந்தது. இந்த ஊரில் கரிகால சோழனை 11 வேளிர் மன்னர்கள் ஒன்றுதிரண்டு தாக்கினர். ஆனால் அவர்கள் அனைவரும் கரிகால சோழனின் போர்த் திறன் முன் எதிர்த்து நிற்க மாட்டாமல் போர்க்களத்திலேயே மாண்டனர். அவர்கள் முழக்கிய முரசுகள் மட்டுமே போர்க்களத்தில் எஞ்சிக் கிடந்தன. இதனைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சியில் பூரித்து ஆரவாரம் செய்தனர்.


கரிகாலனின் ஆட்சிப்பகுதிகள்:

இந்த போர்களில் வெற்றி பெற்றதன் வாயிலாகக் கரிகால சோழன், பாண்டியரையும், சேரர்களையும் தோற்கடித்து சோழ ஆட்சியின் கீழ் கொண்டுவந்த முதல் சோழ மன்னர் மற்றும் மூவேந்தர்களின் முதல் பேரரசர் என்கிற பெருமையையும் அடைந்தார்.

வாகைப் பெருந்தலை என்ற ஊரில் நடந்த மற்றும் ஒரு போரில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை கரிகால சோழன் தோற்கடித்தார். பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகால சோழனின் வீரம், அவரது படைகள் மற்றும் பகைவர்களின் நாட்டைக் கரிகால சோழனின் படைகள் அழித்த விவரங்களை அவரது நூலில் பதிவு செய்துள்ளார்.

சிலப்பதிகாரம் நூலின் மூலமாக கரிகால சோழனின் வடநாட்டுப் படையெடுப்புப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இமயம் வரை சென்ற கரிகால சோழன் வச்சிரம், மகதம், அவந்தி போன்ற நாடுகளை வென்றோ, அல்லது அந்த நாடுகளோடு உடன்பாடோ செய்து கொண்டதாத் தெரியவருகிறது. இது தவிர இலங்கையை வெற்றி கொண்ட சில மன்னர்களில் கரிகால சோழனும் ஒருவர்.

கல்லணை:

காவிரி ஆறு, கல்லணை 
சோழ நாட்டில் கல்லணை கட்டப்படுவதற்கு முன்பாக, கரிகால சோழனின் காலத்திலும் அதற்கு முன்பும் மக்களின் உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய இலங்கைல இருந்துதான் பெருபாலும் அரிசி பல வகையான தானியங்கள் மற்றும் உண்ணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்கிற புலவர் எழுதிய பட்டினப்பாலை என்கிற நூலில், இலங்கையில் இருந்தும் பர்மாவில் இருந்தும் எப்படி காவிரிப்பூம்பட்டினதில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது என்பது பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

சோழ சாம்ராஜ்யத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்யவும் விளை நிலங்களை அதிகப்படுத்தவும் கரிகால சோழன் கல்லணையைக் கட்டினார். கல்லணை மூலமாக சோழ நாட்டின் நதி நீர் சரியாக விநியோகிக்கப் பட்டு சோழ நாட்டின் உணவுப் பொருட்களின் விளைச்சலும் அதிகரித்தது. “சோழ நாடு சோறுடைத்து” என்ற புகழும் அடைந்தது.

கரிகால சோழனின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய சரியான தகவல்கள் ஏதும் சரித்திர ஆராச்சியாளர்களுக்குக் கிடைக்கவில்லை. கரிகால சோழன் மனைவி மற்றும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தார் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறியுள்ளார்.

நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருவரை கரிகாலன் மணந்தார் என்று நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் கூறப்பட்ட மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார். கரிகாற்சோழனின் மகள் பெயர் ஆதிமந்தியா, ஆனால் இந்த செய்தியை உறுதிபடுத்தும் விதமாக எந்த ஒரு சான்றும் இதுவரை கிடைக்கவில்லை.

கரிகாற் பெருவளத்தான் அவரது வாழ்வின் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் தனது உலக வாழ்வை நீத்தார் என்பது தெரிகிறது ஆனால் எந்த வருடம் உயிர் துறந்தார்னு என்ற விவரம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. கரிகால சோழன் இறந்ததால் சோழ நாட்டில் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றி கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியிருக்கிறார்.

கரிகால சோழனின் மறைவுக்கு பிறகு நலங்கிள்ளி சோழ அரசரா பதவி ஏற்றார். இவர் கரிகால சோழனின் மகனாக இருக்கலாம் என்று நம்பபட்டாலும் அறுதியிட்டு உறுதியாக இவர் கரிகால சோழனின் மகன்தான் என்று கூறும் தகல்வகள்களோ அத்தாட்சியோ எதுவும் இதுவரை சரித்திர ஆராட்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.

கரிகால சோழனை கெளரவிக்கும் வகையில் கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது