Best Books to Read in Tamil | தமிழர் நாகரிகம் பற்றிய சிறந்த ஐந்து புத்தகங்கள்.

வைகை நதி நாகரிகம்:

 ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான்.


அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன.

ஆதிச்சநல்லூர் -கீழடி மண்மூடிய மகத்தான நாகரிகம்:

மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே பரவியது என்பதற்கும் ஆதாரமாக இருப்பது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடந்த அகழாய்வுகளே. அதை ஆய்வு கண்ணோட்டத்தில் "தோண்டி" எடுத்து தமிழ் இனத்தின் பெருமையை இந்த நூலில் ஆசிரியர் அமுதன் பறைசாற்றி இருக்கிறார். ஒரு பல்கலைக் கழகம் குழு அமைத்து ஆற்ற வேண்டிய பெரும் பணியை தனி மனிதராக ஆற்றி இருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமே என்பதை இந்தநூலின் ஒவ்வொரு பக்கமும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. 

இப்போது அழகிய வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நூல் வடிவம் பெற்றுள்ளது. "இந்த நூலை அறிவுலகம் மகிழ்ந்து பார்க்கும்; ஆராய்ச்சி உலகம் வியந்து பார்க்கும். ஒரு தவத்தைப்போல இந்தத் திருப்பணியை மேற்கொண்ட ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இந்த அரிய நூலை அழகுறத் தந்த தினத்தந்திக்கு என் வாழ்நாள் வணக்கம். என்று அணிந்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை:

தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் அடங்கியிருக்கின்றன. - ஆர். பாலகிருஷ்ணன் ~ தமிழக வரலாற்றைப் புரிந்துகொள்வதில் தொல்லியலின் பங்கு பற்றி நன்கு விளக்குகின்றார் நிவேதிதா. 

கடந்த சில பத்தாண்டுகளில் உருவான தொல்லியல் சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளையும் உத்திகளையும் எளிய தமிழில் அறிமுகப்படுத்துகிறார். நல்ல தருணத்தில் வந்துள்ள வரவேற்கத்தக்க நூல். - சு. தியடோர் பாஸ்கரன் ~ இந்நூல் மூலமாக தொல் தமிழ் காலத்தையும் நம் முன்னோர்களின் மொழியாற்றல், கைவினை, போர்க்கலை போன்ற ஒப்பற்ற நாகரிகப் பெருமைகளையும் அறிந்துகொள்ள முடியும்.

வேள் பாரி:

பறம்பு மலையையும் தன் குடிகளையும் நேசித்தும் சுவாசித்தும் ஆட்சி செய்து பாதுகாத்துக்கொண்டிருந்தவன் குறுநில மன்னன் பாரி. அவன், வேளிர்குலத் தலைவனானதால் வேள்பாரி. சங்ககால வள்ளல்கள் மற்றெவரையும்விட சிறந்த வள்ளல் தன்மை கொண்டவன் பாரி என தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் பாடிப் போற்றினர். சேர, சோழ, பாண்டியர் என மூன்று பெருவேந்தர்களும் ஒன்றாகச் சேர்ந்து பாரியை அழித்தொழிக்க பறம்பின் மீது முற்றுகையிடுகிறார்கள். ஆனால், பாரியின் பறம்பு மலையைக்கூட வெல்ல முடியாமல் போராடிய மூவேந்தர்களின் பெரும் படைகளை, அளப்பரிய தன் வீரத்தாலும் போர் வியூகங்களாலும் முழு முற்றாக அழித்தொழிக்கிறான் வேள்பாரி. 

அப்படிப்பட்ட பாரியின் வரலாற்றுடன் வெகு நயமான புனைவுகளையும் பாத்திரப் படைப்புகளையும் இணைத்து தன் வசீகர எழுத்தால் பாரியின்பால் இழுத்து வாசிப்பவர்களை வியப்புக்குள்ளாக்கியிருக்கிறார், எழுத்தாளர் சு.வெங்கடேசன். எல்லாம் இணையமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும் தமிழ் வார இதழ் தொடர்களில் 100 வாரங்களுக்கு மேல் ஒரு வரலாற்றுத் தொடர் எழுதப்பட்டதென்பதில் இருந்தே வீரயுக நாயகன் வேள்பாரி தொடரை வாசகர்கள் எப்படி நேசித்து வரவேற்றார்கள் என்பது புரியும். `முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி' என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய, பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்!

வாடிவாசல்:

ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும். 

 காளைக்குத் தன்னோடு மனுஷன் விளை யாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூப மாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.