கரிகால் சோழனின் பெயர் ‌விளக்கம் | Karikal Chola ‌Life History.

சங்ககால இலக்கிய நூல்களில், பெருவளத்தான், திருமாவளவன், கரிகால் வளவன் என குறிப்பிடப்படும், கரிகால சோழன், கரிகால பெருவளத்தான், முற்காலச் சோழர்களில் தனது போர் திறமைகளினாலும், கட்டிட கலைகளினாலும் நன்கு அறியப்படுபவர் ஆவார்.

கரிகால சோழனின் பெயர் விளக்கம்:

விளக்கின் தீபம் கரிய மைய பகுதியை திரியில் கால் போன்று உண்றி எரியும் அந்த நெருப்பே கரிகாலன் .

இவர் மனுநீதிச் சோழன் (அல்லது) எல்லாளன் வழி வந்தவர் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை இளஞ்சேட்சென்னி, பூம்புகார் என்னும் காவேரி சமவெளியுனுள் அமைந்துள்ள, ஒரு குறு நிலத்தை ஆட்சி செய்த மன்னர் ஆவார்.

கரிகால சோழன் தன் தாய் வயிற்றில் இருந்த போதே, அவருடைய தந்தை இளம்சேட்சென்னி கொல்லப்பட்டார். இதனை பொருநராற்றுப்படையில், 143–148 ஆம் வரிகளின் மூலம் அறிய முடிகிறது,

வெல்வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி
                             - பொருநர்: 129-132


இரும்பனம் போந்தைத் தோடும் கரும்சினை
அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்
ஓங்குஇரும் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரும் வேந்தரும் ஒருகளத்து அவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ஆர் கண்ணி கரிகால் வளவன்
                                - பொருநர்: 143-148

இம்மன்னன் இளஞ்சேட்சென்னி என்னும் அரசனுடைய மகன் என்பதனை ‘உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்’ எனவரும் அடி உறுதிசெய்கின்றது. இவன் தன்தாய் வயிற்றில் கருவாயிருந்த போதே இவன் தந்தை இறந்தான் என்பதனையும் தாய் வயிற்றிலிருந்த போதே அரசுரிமை பெற்றுப் பின்னர் பிறந்தான் என்பதனையும் பொருநராற்றுப்படை ‘தாய்வயிற்று இருந்து தாயம் எய்தி’ என்னும் அடியினால் பதிவுசெய்கின்றது.

அதைத் தொடர்ந்து கரிகால சோழன் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறி, கரூர் என்னும் இடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார். ஆனால் கரிகால சோழனுடைய அரசியல் எதிரிகள், ஆட்சியின் ஆசையினால், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது கரிகாலனுக்கு மிகவும் சிறிய வயதானதால் அவர்களை எதிர்த்து ஒன்னும் செய்ய இயலவில்லை. இருப்பினும் கரிகால சோழனின் செல்வாக்கு மக்கள் மத்தியில நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்தது. அதனால் கரிகால சோழனை கொல்ல நினைத்த, அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்தனர்.

பின்னர், அவரது மாமன் இருபிடர்தலையன் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து, பெரும் படையை திரட்டி எதிரிகளை தோற்கடித்து சோழ அரியசனத்தில் மன்னராக அமர்ந்தார். பின்னர் அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் சேர மன்னரும், பாண்டிய மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும்படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.

இன்றைய வெண்ணி (இப்போதுள்ள கோவில்வெண்ணி) என்னும் இடத்தில் நடந்த அந்த போரில், உதியன் சேரலாதன் கரிகால் வளவனைத் தாக்கினான். அப்போது சிலர், அவனை முதுகுப்பக்கம் தாக்கினர். அதனால் “முதுகில் காயம் பட்டுவிட்டதே” என்று நாணிச் சேரலாதன் போர்க்களத்திலேயே தன் வாளை நிலத்தில் குத்தி வைத்துக்கொண்டு போரிடாமல் வடக்கு நின்று உயிர் நீத்தான்.

இந்த காட்சியினை, அகநானூற்றின் பாலை திணை பாடல் மூலம் நன்கு அறிய முடிகின்றது.

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
                                  - அகநானூறு (055)

இந்த போர் கி.பி 130 காலக்கட்டத்தில் நடந்ததாக வரலாற்று ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.

இந்த போர் கரிகால சோழரின் வாழ்க்கையில் மிகவும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து விரிவு படுத்த எண்ணினார். பின் பல போர்களில் வெறியோடு போரிட்டு பாலக்காடு, திருவாங்கூர், கொச்சி, தென்/வடமலையாளம் ஆகிய பகுதிகளை கொண்ட சேர நாட்டையே தனது பேரரசின் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தான்.

பின்னர், தொண்டை நாட்டையும் கைப்பற்றி, அதன் மேல்சென்று வடக்கே வேங்கடம் என்னும் திருப்பதியையும் கைப்பற்றினார்.

அதன் பின் ஒரு பெரிய படையை திரட்டி, வடக்கு நோக்கி சென்று இமயம் வரை சென்று வந்தான் என்று சிலப்பதிகாரம் மற்றும் பெரியபுராணம் பாடல்களின் மூலம் தெரிகிறது,

இருநில மருங்கின் பொருநரை பெறாஅச்
செறுவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள் எனப்
புண்ணிய திசை முகம் போகிய அந்நாள்
                         - சிலப்பதிகாரம் (84–94)

பொன்மலை புலி வென்று ஓங்கப்
புதுமளையிடுத்துப்
பொற்றும் அந்நெறி வழியேயாக
அயல் வழி அடைத்த சோழன்"
                                   - பெரியபுராணம் 55

பின்னர் பெரும் கப்பற் படை கொண்டு, சிலோன் (இலங்கை) யும் கைப்பற்றினார். வரலாற்றின் பதிவுகளின் படி, இலங்கை முழுவதையும் வென்ற சில சோழ மன்னர்களில் கரிகால் வளவனும் ஒருவர்.

கரிகாலன் கட்டிய கல்லணை:

உலகிலேயே மிகப்பழைய  நீரை தேக்கும் கற்கட்டுமானம்.  இதன் நோக்கம் தஞ்சை டெல்டா நிலப்பகுதி முழுவதற்கும் நீர்ப்பாசன வசதி நிரந்தரமாக கொடுக்கவேண்டும் என்பதே.  இது ஒரு பெரிய நீர் தேக்க அணை.  நன்கு செதுக்கப்படாத கற்களால் கட்டப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் கட்டப்பட்ட இந்த அணை வாய்க்கால் இணைக்கப்பட்டது.  இதன் விளைவாக கரிகாலன்   பொன்னிக்குக் கரைகண்ட பூபதி என்று போற்றப்பட்டார்.  கரிகாலன் கட்டிய கல்லணை யார் புன்செய் நிலங்களும்  பாசன பகுதியாக்கப்பட்டது.  இதுவே தமிழகத்தின் வளமிக்க விவசாய பொருளாதாரத்தை உருவாக்க காரணமாகியது.


கரிகாலன் போர்ப் பெருமைகள்:

வெண்ணிப் பறந்தலை போர்:

 இவன் ஒப்பற்ற வீரன்.  இவனுடைய போர்களில் வெண்ணிப்போரும்,  வாகைப் பறந்தலைப்  போரும்  குறிப்பிடத்தக்கன.  சேரனும் பாண்டியனும் வேளிர்  ஒன்பதின்மரும்  கூடி தஞ்சாவூரின் அருகிலுள்ள கோயில்வெண்ணி என அழைக்கப்படும் வெண்ணி வாயில் என்னுமிடத்தில் கரிகாலனை எதிர்த்தனர்.  கரிகாலன் ஒருவனாகவே நின்று போரிட்டு வென்றான். இப்போரில் தான் புறப்புண்  நாணிய   பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து துணிந்தான்.  கரிகாலனின் வெற்றி சிறப்பினை பரணர்,  முடத்தாமக்கண்ணியார்,  மாமூலனார்,  காழத் தலையார்,  வெண்ணிக்குயத்தியார்,  போன்றோர் பாராட்டியுள்ளனர்.  இவனுடைய தாய் பிறந்த    அழுந்தூரில்  வெற்றிவிழாவை கொண்டாடினான்.   கரிகாலனின் வெண்ணிப் போர் வெற்றி  அவரது அரச வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.   இவற்றின் மூலமாக அவரது அரியணை வலுப்பெற்றது.  கரிகாலன் பிற மன்னர்களின் மதிப்பைப் பெற்றார்.  வெண்ணிப் போரில் இருந்து கரிகாலனின் புகழ் உலகெங்கும் பரவியது.

வாகைப் பறந்தலை போர்:

 கரிகாலனுடன் போரிட்டுத்  தோற்ற ஒன்பது வேளிரும் வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் மீண்டும் போரிட்டனர்.  இப்போரிலும்  கரிகாலனே  வென்றான்.   வேளிர்  நமது முரசு,  குடை போன்றவற்றைப்  போர்க்களத்திலேயே போட்டு விட்டு  ஓடினர்.  வடக்கே இருந்த அருவாளரும்  தெற்கே இருந்த ஒளிரும்  இவன் ஆட்சிக்குட்பட்டனர்.   தோற்றுப்போன கூட்டுப்படை கரிகாலனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.   இப்போரின் வெற்றியை கண்டு எஞ்சிய   பிற குறுநில  மன்னர்களும்,   சிற்றரசர்களும் சோழ மன்னனின் ஆட்சியை ஏற்றுக்   கொண்டு அவனது  ஆட்சியின் கீழ் வந்தனர்.  இருங்கோவேலின்   பரம்பரை இருந்த இடம் தெரியாமல்  போயிற்று.  இப்போர்களின் விளைவாக கரிகாலனின் ஆட்சிப்பரப்பு மேலும் விரிவடைந்து.   தமிழகம் முழுவதும்  கரிகாலனின் ஆட்சியின் கீழ்   கொண்டுவரப்பட்டது.

இமயப் படையெடுப்பு:

கரிகாலன் தனது ஆட்சியை இமயம் வரை  விரிவாக்க எண்ணி இமயம் நோக்கி படை எடுத்தார். கரிகாலன்  கரையோரமாகச் சென்று  வச்சர,  மகத,  அவந்தி,  மன்னர்கள் கரிகாலனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு  பரிசாக முத்துப் பந்தல்,  பட்டி மண்டபம்,  தோரணவாயில் ஆகியவற்றை கொடுத்து பெருமைப்படுத்தினார்.  கரிகாலனின் இமயமலை படையெடுப்பு பற்றி சிலப்பதிகாரம் மட்டுமே கூறுகின்றது.  இப்படையெடுப்பைப்  உறுதி செய்ய வேறு எந்த வட இந்திய ஆவணமும் கிடைக்கவில்லை.

இலங்கைப் படையெடுப்பு:

கரிகாலன் மிக பலமான கடற்படையை கொண்டிருந்தார்.  கடல் ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பிய கரிகாலன் இலங்கை மீது படையெடுத்தார்.  இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் சிறைபிடிக்கப்பட்டனர்.   இப் போர் கைதிகளை கொண்டு காவிரிக்கு கரை எழுப்பினார்.

பொது வாழ்க்கை:

இவரது ஆட்சி காலம் குறித்த சரியான தகவல்கள் ஏதுவும் இதுவரையில் ஆதாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.

நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருவரை கரிகாலன் மணந்தார் என்று நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் கூறப்பட்ட மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார். கரிகாற் பெருவளத்தான் அவரது வாழ்வின் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் தனது உலக வாழ்வை நீத்தார் என்பது தெரிகிறது.

இவருக்கு இரண்டு மகன்கள் (நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி), மற்றும் ஒரு மகள்(ஆதிமந்தி) இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.