மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் | Devaneya Pavanar Biography.

தமிழை அறிவுப்புலத்தில் நிலைநிறுத்திய பெருமக்களின் சேவை ஈடு இணை அற்றது. நவீன அறிவுலக யுகத்தில், தமிழ் இன்று நின்று நிலைத்து முன்னேறிக் கொண்டு இருக்கின்றது என்றால், அதற்கான அடிவாரத்தை உறுதிபட நாட்டியோர் பலர். தமது சொந்த வாழ்க்கையை தமிழுக்காக தியாகம் செய்து, தமிழையே மூச்சாகவும் பேச்சாகவும் உயிராகவும் கொண்டு அவர்கள் அறிவுப்புலத்தில் உழைத்தார்கள். அவர்களில் முதல் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க பெருந்தகையாளரே தேவநேயப் பாவாணர்.

தேவநேயப் பாவாணர் ஆற்றிய பணிகளே, பிற மொழிகள் மத்தியில் தமிழை தனிப்பெரும் கம்பீரத்துடன் நிமிர்ந்திருக்கச் செய்துள்ளன.  மொழியியல் துறையில் இவரது அளப்பரிய பங்களிப்பின் காரணமாக, “மொழிஞாயிறு” என்ற சிறப்புப் பட்டம் இவரை வந்தடைந்தது.




சிறந்த சொல்லாராய்ச்சி வல்லுநராக விளங்கிய அவர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள சங்கரன் கோயிற் பகுதியில் தேவநேயப் பாவாணர் 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் திகதி பிறந்தார். ஞானமுத்து தேவேந்தரனாருக்கும் பரிபூரணம் அம்மைக்கும் மகனாய் பிறந்த அவர், தமது ஐந்து வயதிலேயே பெற்றோரை இழக்கும் துயர்மிக்க நிலையை எதிர்கொண்டார். அவரது மூத்த தமக்கையாரின் பாதுகாப்பில் ஆம்பூரில் கொண்டு சென்று அவர் வளர்க்கப்பட்டார். 

கல்வியில் மிகவும் சிறந்து விளங்கிய அவர் தமது 17 ஆவது வயதிலேயே உயர்நிலைக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றினார். இந்த நிலையில் ஆம்பூர் உயர்நிலை பள்ளியில்  உதவித் தமிழாசிரியராக அவருக்கு பணி உயர்வு கிட்டியது. 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டிதர் தேர்வில், அந்த ஆண்டு தோற்றிய மாணவர்களில் இவர் ஒருவருக்கே இடம் கிடைத்தது. அதேபோல, 1926 ஆம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச்சங்கம் நடாத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்விலும் தனியொருவராக தேர்ச்சியடைந்தவர் என்ற பெருமையும் தேவநேயப் பாவாணருக்கே கிட்டியது. 


சென்னைப் பல்கலைக்கழகத்தின் B.O.L. எனப்படும் இளநிலைத் தேர்வில் தேர்வு பெற்ற அவர், மன்னார்குடி பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் கற்பித்து வந்த காலத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசையைக் கற்றார்.

மொழியாராய்ச்சி' - ஒப்பியன் மொழி நூல்” என்ற தேவநேயப்பாவாணரின்  ஆய்வுக்கட்டுரை 1931 ஆண்டு வெளிவந்தது. அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ்ச் செல்வி என்ற இலக்கிய சஞ்சிகை இதனை வெளியிட்டது. ”திரவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே” என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் M.O.L. என்ற முது நிலைப் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார் தேவநேயப் பாவாணர். ஆனால் அது சென்னைப் பல்கலைக்கழகத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

சென்னைப்பல்கலைக்கழகத்தின் இந்தச் செயல் அவரது மொழியாராய்ச்சி வேகத்தை மென்மேலும் அதிகரிக்கும் உந்துசக்தியாகவே அமைந்தது. தேவநேயப் பாவாணருடைய ”ஒப்பியன் மொழிநூல்” 1940 ல் வெளியானது.  அவர் தனது முதுகலைப்பட்டத்தை 1952 இல் பெற்றுக்கொண்டார். 
சொல்லாய்வில் ஈடுஇணையற்ற புலமையாளராக திகழ்ந்த தேவநேயப்பாவாணர் தமிழ் வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபட்டார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறையில் துணைப்பேராசிரியராக சேர்ந்த அவர் பாவாணர் தனித் தமிழ்க் கழகம், தென்மொழி, உலகத் தமிழ்க் கழகம், பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி ஆகியவற்றை உருவாக்கினார்.
1965 ல் தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிரான போராட்டங்கள் பரவலாக இடம்பெற்றன. அந்தக் காலப்பகுதியில் தென்மொழி இதழின் சிறப்பாசிரியராகப் பணியாற்றிய தேவநேயப் பாவாணர் எழுதிய ஆழம் மிக்க கட்டுரைகள் அரசின் கவனத்திற்கு உள்ளானது. 

கட்டவிழ்த்து விடப்பட்ட அரசின் அதிகார அலை தேவநேயப் பாவாணரையும் தாக்கியது. இந்திய பாதுகாப்புச் சட்டம் அவர் மீது பாய்ந்தது. ஆனால், தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு பெருஞ்சித்திரனார் பொறுப்பேற்றுக் கொண்டமை காரணமாக, அந்த வழக்கிலிருந்து தேவநேயப்பாவாணர் விடுவிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், மக்களிடம் உள்ள தமிழ்ப்பற்றை தங்களின் அரசியல் இலாபத்துக்காகவே பயன்படுத்திக் கொள்வதாக மனம் வருந்திய தேவநேயப் பாவாணர் உலகத் தமிழ்க் கழகத்தை உருவாக்கிச் செயற்படுத்தினார்.  

தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், The Primary Classical Language of the works என்ற ஆங்கில நூல், திருக்குறள் தமிழ் மரபுரை, இந்தியாவில் தமிழ் எவ்வாறு கெடும்?, தமிழர் மதம்,  மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை, தமிழ் வரலாறு போன்ற நூல்களை ஆக்கிய அவர், 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி மொழியியல் துறையில், தமிழுக்கான தனித்துவ அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக எந்த அளவு பாடுபட்டாரோ அதே அளவுக்கு அவர் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வு மேம்பட வேண்டும் எனவும் பாடுபட்டார். தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பெயர்களை பெயரின் பின் சேர்க்கும் பழக்கத்தைக் கைவிட வைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்திய தேவநேயப் பாவாணர், சாதிகளுக்கு இடையேயான கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார்.

பிற தென்னாசிய மொழிகளுடன் ஒப்பிடுகையில், நவீன தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் இன்று வெகுவேகமாக முன்னேறிக் கொண்டு உள்ளது. இந்த நிலைக்கான ஆரம்பகட்ட அத்திவாரத்தை இட்டவர் என்ற பெருமையில், தேவநேயப்பாவாணர் என்றும் தமிழ்ப்பெருந்தகையாளாராக போற்றப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.