ஒளவையின் வாழ்க்கை வரலாறு | Avvaiyar Life History Details In Tamil.

ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கால், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது.

பெயர் சிறப்பு:

இத்தமிழ் மூதாட்டியின் பெயர் சிறப்பினை நோக்குங்கால், அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய “ஔ” எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது. அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் என்று பழந்தமிழ் அகராதி பகர்கிறது. அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்தே பெரும் சிறப்பு வாய்ந்த தமிழ்ப்புலவி இவர் என்பது வெள்ளிடைமலை.

ஆற்றிய பணிகள்:

ஒளவை பிராட்டியார் உலக மாந்தர் உய்வடைய தமது கவிப்பாக்களின் வழி நிறைய நற்பணிகளை ஆற்றிச் சென்றுள்ளார்.மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்களை மிகவும் எளிய முறையில், ஒருவரிக் கவிதைகளாக புனைந்து மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் அற்புதமாகப் படைத்தளித்தவர் ஒளவை பிராட்டி என்றால் அது மிகையல்ல…! இவர் இலெளகிகம், வைதிகம் இரண்டும் ஐயம் திரிபுர புரிந்து, அவற்றை மேன்மை வாய்ந்த தனது கவிப்புலமையால் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் இனிய நடையில், எளிய முறையில் மக்களுக்கு கவிதைகளாக்கித் தந்துள்ளார்.


தமிழ் தொண்டு:

சங்ககாலப் புலவர்களுள் ஒருவராக போற்றப்படும் ஒளவை எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் பாடல்கள் 59 இயற்றியுள்ளார். அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் காலங்களை வென்று வாழும் இத்தமிழ் பொக்கிசங்களை உலகுக்கு அளித்து மாபெரும் தமிழ் தொண்டு புரிந்தவர் ஒளவை ஆவார்.

எல்லோர்க்கும் எல்லாத் திற‌மைகளும் வாய்த்து விடுவதில்லை, அப்படியே வாய்த்திருந்தாலும் அதை வெற்றிகரமாக உபயோகித்து தானும் பிறரும் பயனடையும் வண்ணம் எல்லோரும் வாழ்ந்து விடுவதில்லை, ஆனால் பிறப்பிலேயே தமிழறிவுடன் பிறந்த ஒளவையானவர், இயல்பிலேயே வரகவித்துவம் வாய்க்கப் பெற்றவர். இவர் தமது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி அருமையான கவிப்பாக்களைப் புனைந்து, பிற‌ரை ம‌கிழ்வித்து தானும் அதன் மூலம் ப‌ரிசில் பெற்று, இன்றுவரை நிலைத்திருக்கும் வண்ணம், நாமும் ப‌டித்துண‌ர‌வும் வகையில் ப‌ல சிற‌ப்பான நூல்களையும் உருவாக்கித்தந்து அருமையான‌ த‌மிழுக்கு மேலும் அணிக‌ல‌னாய் விள‌ங்கச் செய்து தமிழ்த் தொன்டாற்றியுள்ளார் ஒள‌‌வை பிராட்டியார்.

சங்ககால ஔவையார்:

இவர் ஒரு பாண்மகள் அல்லது பாடினி. இவர் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் உற்ற நண்பர். அதியமான் வாழ்ந்த காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. அதியமானின் வீரத்தையும் கொடையையும் புகழ்ந்து ஔவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் பலவுண்டு. அத்துடன், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பல அரசர்களைப்பற்றியும் பாடியுள்ளார்.