அண்டார்டிகா பற்றிய அறிவியல் உண்மைகள் | Scientific Facts About Antarctica.

முதன்முதலாக 19 ஆம் நூற்றாண்டில் சார்லஸ் வில்க்ஸ் என்ற அமெரிக்க மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டது என கருதப்பட்டாலும் 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அண்டார்டிகா என்ற நிலப்பரப்பைப் பற்றிய தேடுதல் தொடங்கப்பட்டது. அக்காலத்தில் இந்நிலப்பரப்பானது Terra Australis என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

முக்கியமாக நன்னம்பிக்கை முனைக்கு (Cape of Good Hope) பெயரிட்ட பார்த்தலோமியோ டயஸ், உலகை முதன்முதலாக சுற்றிவந்த போர்ச்சுகீசிய மாலுமியான ஃபெர்டிணான்ட் மெக்கல்லன் மற்றும் போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றி முதலியோர் அண்டார்டிகாவை கண்டுபிடிக்கும் பயணத்தில் மும்முறமாக ஈடுபட்டார்கள். ஆனால், 18-ம் நூற்றாண்டில் ஜேம்ஸ் குக் என்ற இங்கிலாந்து மாலுமியால் இந்நிலப்பரப்பைப் பற்றி அதிக தரவுகள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. 

                

இவர் அலெக்சாண்டர் டால்ரிம்பில் என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த புவியியலாளர் வெளியிட்ட குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு கடற்பயணத்தைத் தொடங்கினார். சில ஆண்டு தேடுதலுக்கு பிறகு 1773-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் அண்டார்டிக் வட்டத்தை (Antarctic Circle) கடந்தார்.ஆனால், பனிப்பாறைகளின் இடையூறுகளால் அவரால் அதற்குமேல் நீண்டதூரம் செல்லமுடியவில்லை.

அண்டார்டிகா கண்டுபிடிப்பு: 

பின்னர் 45 ஆண்டுகளுக்கு பிறகு வில்லியம் ஸ்மித் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாலுமி 1819 பிப்ரவரி 19-ல் முதன்முறையாக அண்டார்டிகா கண்டத்தைச் சேர்ந்த ஒரு தீவை (லிவிங்ஸ்டன் தீவு) அடைந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு பயணம் மேற்கொண்டு தெற்கு ஷெட்லாண்டு, கிங் ஜார்ஜ் தீவு ஆகிய இடங்களைக் கண்டுபிடித்து அவற்றை பிரிட்டனுக்கு சொந்தமான தீவு என அறிவித்தார்.ஆனால் முதன்முதலாக அண்டார்டிகா கடற்கரையை அடைந்தவர்கள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஃபாபியன் கோடிலெப் வான் பெல்லிங்கோசன் மற்றும் மிக்கேல் லசாரெவ் என்பவர் எனவும் அறியப்படுகிறது. 

இவர்கள் அடைந்த இடத்திற்கு இடத்திற்கு இளவரசி மார்த்தா கடற்கரை என பெயரிடப்பட்டது. ஆனால் இவர்கள் உள்ளே நுழையவில்லை. ஜான் டேவிஸ் என்ற அமெரிக்க மாலுமி 1821-ல் அண்டார்டிகாவின் முக்கிய நிலப்பரப்பில் காலடி வைத்தேன் என கூறினாலும் வரலாற்று ஆய்வாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.அதற்கு பிற்பட்ட காலங்களில் ஜேம்ஸ் வெட்டல்,சார்லஸ் வில்க்ஸ் ஆகியோரால் அண்டார்டிகா பற்றிய தகவல்கள் மற்றும் அங்கு கிடைத்த புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அண்டார்டிகா உலகில் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜேம்ஸ் வெட்டலைப் போற்றும் விதமாக அண்டார்டிகாவின் முக்கியமான கடல் பகுதிக்கு வெட்டல் கடல் எனப் பெயரிடப்பட்டது.

ஆராய்ச்சிகளின் ஆரம்பம்:

முதன்முதலாக 1819-ல் பிரிட்டன் தான் கண்டுபிடித்த இடத்தை தனக்கு சொந்தமான இடம் எனக் கூறவும் அனைத்து நாடுகளும் ஒவ்வொரு இடத்தையும் சொந்தம் கொண்டாடத் தொடங்கின.இதனால் சர்வதேச அளவில் பல குழப்பங்கள் எற்பட்டன.அவரவர்கள் கைபற்றிய இடத்தில் ஆராய்ச்சிகள் தொடங்கினர்.முக்கியமாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் அண்டார்ட்டிக்காவைப் பற்றிய ஆராய்ச்சி பல நாடுகளால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1959-ல் Antartica Treaty System (ATS) என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஆராய்ச்சிக்கான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு அதில் 12 முக்கிய உறுப்பினர்களால் கையெழுத்து இடப்பட்டது.அவை,

• ஆஸ்திரேலியா
• அர்ஜென்டினா

• பெல்ஜியம்
• சிலி

• பிரான்ஸ்
• ஜப்பான்

• நியூசிலாந்து
• நார்வே

• ரஷ்யா
• தென் ஆப்ரிக்கா

• இங்கிலாந்து
• அமெரிக்கா

பிற்காலத்தில் இந்த குழுவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆராய்ச்சி செய்ய விரும்பிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டன. தற்போது 54 நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.இதில் இந்தியாவும் ஒன்று(1983-ல் சேர்க்கப்பட்டது).தற்போது இந்தியாவிற்கு மூன்று ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.அவை,

• தக்ஷின் கங்கோத்ரி

• மைத்ரி

• பாரதி

ஆராய்ச்சிகள்:

அண்டார்டிகாவில் இராணுவம் தொடர்பான ஆராய்ச்சிகளைத் தவிர்த்து பல துறைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது‌. அவை பின்வருமாறு…
புவியியல் ஆராய்ச்சிகள்:
அண்டார்டிகாவில் மனிதர்கள் வாழாத காரணத்தால் அங்குள்ள எந்த விதமான புவியியல் அடுக்குகள் மற்றும் புதைபடிம பொருட்கள் எதுவும் சிதையாமல் இருக்கும். எனவே இவைகளைக் கொண்டு பூமியின் தோற்றம் குறித்து பல துல்லியமான விடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. 

உயிரியல் ஆராய்ச்சிகள்:

அண்டார்டிகா ஒரு தனிமையான, குளிர்ச்சியான, மனித நடவடிக்கைகளால் பெரிதும் பாதிப்படையாத ஒரு கண்டமாகும். ஆனால் உலகம் வெப்பமயமாதல், ஓசோனில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றால் இக்கண்டமும் இங்குள்ள உயிரிகளும் பாதிப்படைந்து வருகின்றன. இதன் தாக்கத்தையும் இங்குள்ள உயிரிகளில் இவை ஏற்படுத்தும் விளைவுகளும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.மேலும் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயற்பியல் ஆராய்ச்சிகள்:

இவ்வகை ஆராய்ச்சியில் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கூறுகளின் வகை‍, பனிப்பாறைகளின் தன்மை, ஓசோன் பாதிப்பால் ஏற்படும் விளைவு ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.மேலும்,

• உலகின் மற்ற இடங்களில் ஏற்படும் பருவநிலை மாற்றத்திற்கும் இங்கு ஏற்படும் பருவநிலை மாற்றத்திற்கும் இடையேயான ஒப்பீடு.

• காலத்திற்கு ஏற்ப பனிப்பாறைகளில் ஏற்படும் மாறுபாடுகள்.

• அங்கிருந்து தென்படும் நட்சத்திரங்கள் மற்றும் இதர வான்பொருட்கள் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகள்.

• எரிமலைகள் மற்றும் அவைகளின் தன்மை பற்றிய ஆராய்ச்சிகள்.

அறிவியல் ஆராய்ச்சி திட்டங்கள்:

SCAR (Scientific Committee on Antarctic Research)-ஆல் பல வகையான அறிவியல் ஆராய்ச்சிகள் அண்டார்டிகாவில் நடத்தப் படுகிறது.அவை,

• 21-ம் நூற்றாண்டில் அண்டார்டிகாவில் மாறுபடும் காலநிலைகள்.

• அண்டார்டிகாவின் சுற்றுச்சூழல் தன்மை.

• அண்டார்டிகாவில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் உயிரிகளில் ஏற்படும் மாற்றங்கள்.

• கடந்த காலங்களில் அண்டார்டிகாவில் நடந்த பனிப்பாறை நகர்வு தொடர்பான ஆராய்ச்சிகள்.

அண்டார்டிகாவில் ஏற்படும் பனிச்சரிவால் கடல்மட்டத்தில் ஏற்படும் விளைவுகள் ஆகியவை.
ஆனால், இவ்வகையான ஆராய்ச்சிகளால் புவியின் காந்தப்புலம் பாதிப்பு, அங்குள்ள உயிரிகளின் அழிவு, பனிப்பாறை சரிவுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.மேலும் மீன்பிடிப்பு, சுற்றுலா போன்றவற்றையும் உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்துகொண்டு வருகின்றன.