உலகின் முதல் அணைக்கட்டு கல்லணை | World Oldest Dam Details In Tamil

நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டி விவசாயத்தை மேம்படுத்தும் யுக்தியை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதற்கு, கி.பி. 150 இல் கட்டப்பட்டு இன்று வரை நிலைத்திருக்கும் "தி கிராண்ட் அணைகட்" என்று ஆங்கில ஆய்வாளர் சர்.ஆர்தர் காட்டன் அவர்களால் புகழப்பட்ட 'கரிகாலன் கட்டிய கல்லணை' சான்றாக இருக்கிறது. 

பாறைகளை உடைப்பதற்கு வெடிமருந்து பொருட்களும், அதிக பளுவான எடைகளை சுமப்பதற்கு 'கிரேன்' போன்ற தொழில் நுட்பக்கருவிகளும், பொறியியல் வரைபடங்கள் போட கம்ப்யூட்டர் போன்ற தொழில் நுட்ப உதவிகளும் எதுவும் இல்லாதிருந்த இரண்டாம் நூற்றாண்டு காலத்திலேயே, ஓடிக்கொண்டிருந்த ஒரு பெரிய நதியின் குறுக்கே இப்படிப்பட்ட பிரமாண்டமான ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து உலக பொறியியல் வல்லுனர்கள் வியக்கிறார்கள்...! 

மேலும், இதுவே உலகில் வெற்றிகரமாக கட்டப்பட்ட முதல் அணைக்கட்டு ஆகும்...! தஞ்சையை இந்தியாவின் நெற்களஞ்சியமாக மாற்ற உதவியதும் இக்கல்லணையே. அதைக்காட்டிலும் பெரிய சிறப்பு என்னவென்றால், இதில் பயன்படுத்தப் பட்டுள்ள மாற்றுப்பாதை (By-pass technology) திட்டமாகும். இது நவீன விஞ்ஞானத்திற்கு இணையானதாகும். கல்லணை கட்டுவதற்கு வேண்டியிருந்திருக்கக்கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள்.

இது திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கட்டப்பட்டுள்ளது.
வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.
பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும்காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்குக் கல்லணைக்கருகில் காவிரியின் அருகே வருகிறது.
கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே ஒருவித இணைப்பு ஏற்படுகிறது. 

ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்துவிட்ட காவிரியும் இயற்கை விதியின்படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான் திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால்கத்றே. திருவால்கத்தின் மேல்முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது.

மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொமுங்கி என அழைக்கப்படும் ரெகுலேட்டர் தான். வெள்ளம் வரும்போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தைக் கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள். அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது.
காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது. 

காவிரி உயர் மட்டம்; கொள்ளிடம் பள்ளம்; கரிகாலன் கல்லணை கட்டுவதற்குமுன், காவிரி தன் வடகரையை உடைத்துக் கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டு இருந்திருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் சிந்தனை வியப்பை ஏற்படுத்துகிறது. காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான். காவிரி உள்ளளவும் அக்கற்கள் நிலைத்திருக்கும்படி அணையைக் கட்டினான்.

கீழே காவிரியிலும் அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு, அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன். ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையைக் கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக்கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனுபவம் கிடையாது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் நீரொமுங்கி மதகுகள் அமைத்-தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றி-லும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று. கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொமுங்கி கட்டினார்கள். கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள்.
இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று. 

கொள்ளிடத்திலுள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு, கல்லணை மணற் போக்கிகள் வழியாகத் தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்பதும் இயலுகிறது. பின்னர், 1934இல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்வாய் தலைமதகுக்காக வெண்ணாற்றுத் தலை மதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொமுங்கி அமைத்தனர்.
இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவு அடைந்துள்ள கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சை பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன. 

கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும், கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன. கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழளாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
கல்லணையிலேயே பிரிந்த வெண்ணாறும், வடவாறு, வெட்டாறு, வெள்ளையாறு, கோரையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.

சுமார் 3,000 சதுர மைல் பகுதியைச் செழிக்கச் செய்துவிட்டு, கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன; சேர்ந்து இனிப் பயன்படுத்த முடியாது என்றுள்ள கடை கோடிக் கழிவு நீரையும் மழைத் தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன. கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களை எல்லாம் திருவெறும்பூர்ப் பகுதியிலிருந்து கொண்டு வந்து தடுத்துக் கட்டினான் என்று கூறுகின்றனர்.