வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு | Velu Nachiyar History In Tamil

நம்மில் பலர் சுதந்திர போராட்ட வீரர்கள் என்றவுடன் முதலில் உச்சரிக்கும் பெயர் தமிழருடைய பெயராக இருக்கும் என்பதில் உறுதியில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் என்று மேற்கோளிட்டு கேள்வி கேட்கையில் தான், சுதந்திர போராட்ட வீரர்களில் நம் நினைவுகளில் புதைந்த தமிழர்களைத் தேடுவோம். நம்மில் சிலருக்கு, தன்னலமில்லாத சுதந்திரப் போராளிகளின் பெயர் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. இந்த கட்டுரையில் நாம் காணயிருப்பது, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியாரைப் பற்றி தான்.

வேலு நாச்சியார் 1730 ஆம் ஆண்டு சனவரி 3 ஆம் தேதி, இராமநாதபுரத்தில் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மகளாக பிறந்தார். வேலு நாச்சியார், இராஜா செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதிக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தற்காப்புக்கலைகள் பயின்றவர். வால், சிலம்பம் சுற்றுதல், குதிரை ஏற்றம், வில்வித்தை அனைத்திலும் கை தேர்ந்தவர். வேலு நாச்சியாருக்கு தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மற்றும் உருது போன்ற மொழிகள் தெரியும். 

இராஜா செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி தன் மகளை ஒரு ஆண் மகன் போல் தான் வளர்த்தார். சிறு வயது முதலே கல்வியறிவில் சிறந்து விளங்கிய வேலு நாச்சியாருக்கு 16 ஆவது வயதிலேயே முத்துவடுகநந்தர் உடையதேவருடன் திருமணம் நிகழ்தேறியது. அப்போது முத்துவடுகநந்தர் உடையதேவரின் தந்தை தான் சிவகங்கை சீமைக்கு அரசராக இருந்தார். அப்போது முக்துவடுகநந்தர் உடையதேவர் தான் அரசவையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். 1750 ஆம் ஆண்டு முத்துவடுகநந்தர் உடையதேவர் அதே சிவகங்கையின் அரசர் ஆனார். வேலு நாச்சியாரின் மகளின் பெயர் வெள்ளச்சி.

ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கதை: 

முத்துவடுகநந்தர் உடையத்தேவர் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, தனது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, இராணி வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர். முத்துவடுகநந்தர் உடையத்தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேய காலனியர்களோடு நாவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்துவடுகநந்த உடையப்பதேவர் மீது போர் தொடுத்தனர். 1772 ல் நடந்த அந்தப் போரில் முத்துவடுகநந்தர் கொல்லப்பட்டார்.

இந்த செய்தி அறிந்த வேலு நாச்சியாருக்கு பேரதிர்ச்சி. உடனே காலம் தாழ்த்தாமல் இளவரசி வெள்ளச்சியையும் உடன் அழைத்து, பிரதானி தாண்டவராயனும், மருது சகோதரர்களும் சிவகங்கையை எப்படியும் மீட்போம் என்று உறுதி அளித்ததை நம்பி சிவகங்கையை விட்டு இடம்பெயர்ந்தார். அன்று நடந்த காளையார் கோயில் போரில், முத்துவடுகநாதரின் போர் வீரர்கள் மட்டுமல்லாது பெண்கள், குழந்தைகள் என அப்பாவி மக்களும் ஆங்கிலேயர்களால்ன் கொல்லப்பட்டனர். தன் கணவனை இழந்த துயரத்தில் தன் உயிர் காக்க மட்டுமல்லாது, நேரம் வரும் பொழுது தன் நாட்டை உரிய விதத்தில் போரிட்டு மீட்டெடுக்க வேண்டும் என்ற சபதத்தோடு வெளியேறினார்.

கொல்லுங்குடியில் தங்கியிருந்த வேலு நாச்சியார், இளவரசி வெள்ளச்சியை கையில் சுமந்து பிரதானி தாண்டவராயன் மற்றும் மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கலுக்கருகிலுள்ள  விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தஞ்சம் புகுந்தார். விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், உதவி கேட்டு வந்த வேலு நாச்சியார் பாதுகாப்பாக தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தார். விருப்பாட்சிப்பாளைத்தில் வேலு நாச்சியார் தங்கியிருந்த காலத்தில் இவரின் நிலையை அறிந்த சுல்தான் மன்னன் மாதம் 400 பவுண்டு தங்கக் காசுகளை அனுப்பி வந்தார்.

ஹைதர் அலியின் உதவி: 

மன்னர் ஹைதர் அலியிடம்  படை உதவி கேட்டு முறையிட்டார் வேலு நாச்சியார். வேலு நாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு கிடைத்த கடிதத்தில் ஐயாயிரம் குதிரை வீரர்களும், ஐயாயிரம் போர் வீரர்களும் தேவைப்படுவதாகவும், எதிர்பார்த்த அளவில் வீரர்கள் கிடைத்தால் சிவகங்கையை தான் மீட்டெடுக்க ஏதுவாக இருக்கும் என்றிருந்தது.

வேலு நாச்சியார், பிரதானி தண்டவராயன் மற்றும் மருது சகோதரர்களின் துணையுடன் தான், சிவகங்கையை கைப்பற்றிய நவாப் மற்றும் ஆங்கிலேயர் கூட்டுப்படையோடு போர் தொடுக்கச் செல்வதாக திட்டம். ஆனால் போருக்குத் தயாராவதற்குள் வயது முதிர்ந்த காரணத்தினால் உயிர் மாய்த்தார் பிரதானி தண்டவராயன். இப்போது மருது சகோதரர்கள் மட்டுமே துணை. தன் சிவகங்கை மண்ணை மீட்க தன் தலைமையில் ஒரு போர் குழுவையும், நள்ளியம்பலம் தலைமையில் ஒரு போர் குழுவையும், மருது சகோதரர்கள் தலைமையில் ஒரு போர் குழுவையும் அமைத்து தன் நிலத்தை மீட்க மும்முனைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.

நிச்சயம் நவாபிடமிருந்து தன் நாட்டை மீட்டுவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தார் வேலு நாச்சியார். நவாப் தனது எதிரியாயினும், நவாபிற்கு துணை நிற்பது ஆங்கிலேயக் காலனிப் படைகள் தான். உண்மையில் நவாபுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது ஆங்கிலேயர்களின் காலனிப் படைகள் தான். 1857 ல் முதன் முதலில் இந்தியாவிற்குள் வந்து ஆட்சி செய்ய முற்பட்டனர் என்ற கதைகளை மட்டும் கவனத்தில் கொண்டால், அதற்கு முந்தைய காலத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆங்கிலேயர்களின் கதைகள் தெரியவருவது கடினம்.

போர்:

மருது சகோதரர்கள் தலைமையில் இருந்த குதிரைப்படை சிவகங்கை நோக்கி செல்லும்போது தடைகளை ஏற்படுத்தியது போல ஆங்கிலேய காலனியப் படைகள் மூலம் வேலு நாச்சியார் தலைமையில் சென்ற படை மதுரைக்கு அருகில் உள்ள கோச்சடையை  கடக்கும் போதும் தடையை ஏற்படுத்தி வைத்தனர். அனைத்து தடைகளையும் சாமர்த்தியமாக தகர்த்தெரிந்து முன்னோறி சென்றது வீர மங்கையின் படைகள். வேலு நாச்சியாருக்கு மிக முக்கியாமான இந்த போரில் ஆங்கிலேயர்கள் வெடிப்பொருட்களை வைத்திருக்கும் கிடங்கினுள் மாட்டிக்கொண்ட பொழுது வேலு நாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்ற படைப்பெண், வேலு நாச்சியாரைக் காக்க தன்னை தீயில் மாய்த்துக்கொண்டு, ஒட்டு மொத்த வெடிக்கிடங்கையும் அழித்தார். இது வேலு நாச்சியாரை காப்பதற்காக, குயிலி விருப்பத்துடன் செய்த செயல் என்றும் சில குறிப்புகள் கூறுகின்றன.

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் இந்தியப் பெண் வேலு நாச்சியார் தான் என்பது வரலாறு.

அந்த போரின் போது ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆங்கிலேயக் காலனிப் படைகள் ஓடி ஒளியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக செய்திகள் உண்டு. இறுதியில் வேலு நாச்சியார் தனது அரண்மையை அடைந்த பொழுது சிவகங்கை மக்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியுடன் வேலு நாச்சியாரை வரவேற்றனர்.

சரியாக 8 ஆண்டுகள் கழித்து தன் சிவகங்கை நாட்டை கைப்பற்றியவுடன் மக்களின் விருப்பத்திற்கேற்ப, சிவகங்கையில் ஆட்சி புரிந்தார். 1780 வரையிலும் தான் அரசவையின் அரசியாக இருந்து சிவகங்கையை ஆண்டு வந்த  வேலு நாச்சியார். தனக்குப்பின் வெள்ளச்சியை அரசியாக்கினார். 18 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நிலையாக ஆட்சியில் இருந்த ஒரே பெண் அரசர் வேலு நாச்சியாரகத்தான் இருக்கமுடியும்.

19 ஆம் நூற்றாண்டுகளில். கூட கைம்பெண்ணுக்கு பொது நிகழ்வுகளுக்குச் செல்லக்கூடாது, நெற்றியில் திலகம் இடக்கூடாது என்ற நிலை இருந்ததாக நாம் படித்திருக்கிறோம். சிவகங்கையை ஆண்ட அரசி வேலு நாச்சியார் கனவனை இழந்த கைம்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கைம்பெண் என்பதனால் அரச இயல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாமல் ஆட்சி புரிந்து வந்தாராம். அந்த காலத்தில் கைம்பெண்ணுக்கென்று இருந்த கட்டுப்பாடுகளையும் தாண்டி மக்கள் விரும்பும் வண்ணம் தனது ஆட்சி காலத்தில் கலங்கம் இல்லாமல் கண்ணியத்தோடு ஆட்சி புரிந்தது கூட புதுமைப் பெண் பாணியில் நாம் படிக்கும் கதைகளில் வரும் பெண்களின் சாதூர்யமும்  துணிச்சலும் தான்.

இராணி வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வால் போன்ற பொருட்கள் சிவகங்கை அருங்காட்சியகத்தில் இன்றும் மக்கள் பார்வைக்கு என வைக்கப்பட்டிருக்கின்றது. இராணி வேலு நாச்சியாருக்கு என இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 வெளியிடப்பட்டது. இராணி வேலு நாச்சியாரின் ஆற்றலும், ஆளுமையும் மெய் சிலிர்க்கும் வண்ணம் இருக்க, அவரது வாழ்நாளின் இறுதி நாட்கள் கசப்பானதாக இருந்தது என்பதும் குறிப்புகள் கூறும் உண்மை. 

வெள்ளச்சி அரசியாக பதவியேற்கும்போது திருமணம் ஆகவில்லை என்றாலும் 1793ல் வெங்கம் உடையனத்தேவருக்கு மணம் முடித்து கொடுத்து, அதன் பின்னர் அரசராக அவரை அறிவித்தார், வேலு நாச்சியார். இங்கு தான் பிரச்சனையே தொடங்கியது. வெள்ளச்சியின் மறைவுக்கு பின்னர் பெரிய மருது அவரின் மகளை அரசன் வெங்கம் உடையனத்தேவருக்கு மணமுடித்து வைத்தார். இதில் வேலு நாச்சியாருக்கு சிறிது கூட உடன்பாடில்லை. வேலு நாச்சியார் உடன்படவில்லை என்பதைத் தெரிந்தும், பெரிய மருது, தன் மகளை வெங்கம் உடையனத்தேவனுக்குத் தன் மகளை மணமுடித்தார். இதனால் மனம் ஒப்பாத வேலு நாச்சியார் அரண்மனையை விட்டு வெளியேறி, விருப்பாட்சிப்பாளையத்தில் உள்ள உறவினர் இல்லத்தில் தங்கி இருந்தார். பின்னர் விருப்பாட்சிப்பாளையத்திலேயே உயிர் மாய்த்தார்.